2025 டிசெம்பர் 25, வியாழக்கிழமை

இரு இனத்தவருக்கு வேறு வேறு நீதி வழங்குவது அச்சத்தை தருகின்றது' சுகிர்தன்

Gavitha   / 2016 செப்டெம்பர் 10 , மு.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

'இந்த நல்லாட்சி அரசாங்கம் சிங்கள மக்களுக்கு ஒரு நீதியையும் தமிழ் மக்களுக்கும் ஒரு நீதியையும் வழங்குவது, தமிழ் மக்கள் மத்தியில் தொடர்ந்து அச்ச நிலையினையே ஏற்படுத்தியுள்ளது' என்று வடமாகாணசபை உறுப்பினர் சுகிர்தன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் நேற்று வெள்ளிக்கிழமை (09) நடைபெற்ற சத்துருக்கொண்டான் படுகொலை நினைவு தினத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

'சத்துருக்கொண்டான் படுகொலை 26 வருடங்களை கடந்துள்ளபோதிலும் அதன் உறவுகள் இன்றும் கண்ணீருடனேயே உள்ளனர். அவர்களுக்கான நீதி, நியாயம் கிடைக்காத நிலையே இருந்து வருகின்றது.

உருவாக்கப்பட்டுள்ள நல்லாட்சி அரசாங்கம் கூட சிங்கள மக்களுக்கு ஒரு நீதியையும் தமிழ் மக்களுக்கு ஒரு நீதியையும் வழங்குகின்றது. இது தமிழ் மக்கள் மத்தியில் அச்ச நிலையை ஏற்படுத்தியுள்ளது' என்று அவர் கூறினார்.

'2011ஆம் ஆண்டு படுகொலைசெய்யப்பட்ட பாரத லக்ஸ்மனனின் கொலைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் 26 வருடத்துக்கு மேலாக இந்த நாட்டில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இன அழிப்புக்கு இந்த அரசாங்கம் உண்மையான தீர்வை வழங்கவில்லை. இதனை நாங்கள் மிக வன்மையாக கண்டிக்கின்றோம்.

ஐந்து வருடத்தில் சிங்கள மக்களுக்கு ஏற்பட்ட வலிக்கு நீதி கிடைக்குமென்றால்,  சத்துருக்கொண்டான் படுகொலை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட இராணுவ அதிகாரிக்கு எந்தத் தண்டனையும் இதுவரையில் வழங்கப்படாதது இந்த நல்லாட்சி அரசாங்கம் மீது கேள்விக்குறிகளை ஏற்படுத்துகின்றது. இதனாலேயே நாம் சர்வதேச விசாரணை வேண்டும் என்று கோருகின்றோம்' என்று அவர் குறிப்பிட்டார்.

'2009ஆம் ஆண்டு வரை எமக்காக உயிர்நீர்த்த உறவுகளுக்கான நினைவுத்தூபி முள்ளியவாய்க்காலில் அமைக்கப்படவேண்டும். அந்த நினைவுத்தூபியானது, வடகிழக்கில் படுகொலைசெய்யப்பட்ட அனைத்து உறவுகளுக்குமானதாக அமைக்கப்படவேண்டும். இதற்கு அரசாங்கம் தடைவிதிக்காது அதனை அமைப்பதற்கு ஆதரவு வழங்கவேண்டும்.

வடக்கு கிழக்கு இணைந்த தீர்வு ஒன்றைப்பெற்றுக்கொள்ளும் வகையில் அனைவரும் இணைந்து செயற்படவேண்டும்' என்றும் அவர் இதன்போது கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X