2025 மே 15, வியாழக்கிழமை

இ.போ.ச ஊழியர்கள் வேலை நிறுத்தம்

Editorial   / 2018 நவம்பர் 08 , பி.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான், வா.கிருஸ்ணா, எம்.எஸ்.எம்.நூர்தீன், எம்.எம்.அஹமட் அனாம், வி.சுகிர்தகுமார்

இலங்கைப் போக்குவரத்து சபை ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம், நாடளாவிய ரீதியில் இன்று (08) இடம்பெற்றது.

இதற்கமைவாக, கிழக்கு மாகாணத்திலும் இலங்கைப் போக்குவரத்து சபை ஊழியர்கள், இன்று வேலை நிறுத்தப் பேராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களில் இ.போ.ச பஸ் சேவைகள் தடைப்பட்டன.

10,000 ரூபாய் ஊக்குவிப்புக் கொடுப்பனவை, அடிப்படை சம்பளத்தில் உள்ளீர்க்குமாறும் வலியுறுத்தியே, இந்த வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில், மட்டக்களப்பு பிரதான பஸ் டிப்போவிலிருந்து இன்று காலை முதல் பஸ்கள் எதுவும் சேவையில் ஈடுபடாமையால், பாடசாலை மாணவர்கள், அரச உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் பெரும் போக்குவரத்து நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்.

அத்துடன், மட்டக்களப்பு  பஸ் டிப்போ ஊழியர்கள், இன்று காலை பாரிய கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு பஸ் டிப்போவுக்கு முன்னால் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், இலங்கைப் போக்குவரத்து சபையின் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

ஊக்குவிப்புக் கொடுப்பனவான 10,000 ரூபாயை அடிப்படைச் சம்பளத்துடன் இணைத்து, தமக்கு சம்பள உயர்வு வழங்குமாறும் தாம் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டு வருவதாகவும் இதன்போது அவர்கள் தெரிவித்தனர்.

“இலங்கைப் போக்குவரத்துச் சபை ஊழியர்களை ஏமாற்றாதே”, “அதிகரிக்கப்பட்ட சம்பள உயர்வை உடனடியாக வழங்கு”  போன்ற வசனங்கள் எழுதப்பட்ட சுலோகங்களையும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தாங்கியிருந்தனர்.

இந்தச் சம்பள உயர்வை, புதிய அரசாங்கம் வழங்கும் என்ற நம்பிக்கை உண்டு எனவும் தமது கோரிக்கைக்குத் தீர்வு கிடைக்கும் வரைக்கும் தாம் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

இதேவேளை, வாழைச்சேனை போக்குவரத்து சாலை ஊழியர்களும், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது, சாலை முன்பாக இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அம்பாறை மாவட்டத்தில், இலங்கைப் போக்குவரத்து சபையின் அக்கரைப்பற்று சாலை ஊழியர்களும் இன்று (08) காலை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமது தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் இலங்கைப் போக்குவரத்து சபை பொதுமுகாமையாளருக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது, சம்பள அதிகரிப்பை, செப்டெம்பர் மாதம் முதல் வழங்குவதாக உறுதியளித்ததாக ஊழியர்கள் இதன்போது தெரிவித்தனர்.

ஆனாலும், இன்றைய தினம் இலங்கை போக்குவரத்து சபை பொது முகாமையாளர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தின் பிரகாரம், அதிகரிக்கப்படாத பழைய சம்பள முறையில் சம்பளத்தை வழங்குமாறு பணித்துள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

இதனால் தாம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதற்குரிய உரிய தீர்வு வழங்கப்படவில்லையாயின் தமது போராட்டம் தொடரும் எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .