2025 மே 13, செவ்வாய்க்கிழமை

ஏனைய மதத்தை வெறுப்பவரா சட்டத்தை நிர்ணயிப்பார்?

Princiya Dixci   / 2021 நவம்பர் 01 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

வ.சக்தி

பௌத்தம் தவிர்ந்த ஏனைய சமயங்கள் மீது பகிரங்கமாக தமது வெறுப்புணர்வை கொட்டித் தீர்த்து வருகின்ற ஒருவரை, பல்லின மக்களுக்கான சட்டத்தை நிர்ணயிக்கப் பொறுப்பளிப்பது, திருடன் கையில் பொலிஸ் உத்தியோகத்தைக் கொடுப்பதற்கே ஒப்பானதாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவித்தார்.

“ஒரே நாடு ஒரே சட்டம்” தொடர்பான ஜனாதிபதி செயலணி மற்றும் அதற்குத் தலைமைத்துவம் வழங்க கலகொட அத்தே ஞானசார தேரர் நியமிக்கப்பட்டுள்ளமை போன்ற விடயங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “கொலைக் குற்றவாளிகள் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்படுவதும் அவர்களுக்கு அரசாங்கத்தில் முக்கிய பொறுப்பு வழங்கப்படுவதும், நாட்டின் நீதியை மதிக்காதவர் சட்டம் தயாரிப்பதற்கு நியமிக்கப்படுவதும் இலங்கைக்குப் புதிய விடையமல்ல.

“வடக்கு,  கிழக்கு மாகாணங்கள் தமிழர்களுடைய பாரம்பரிய தாயகம் என்ற நிலைப்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் காலங்காலமாக செயற்படும் கொள்கையே பெரும்பான்மையினரிடம் இருந்து வந்திருக்கிறது.

“இந்த வகையில்,  சிங்கள இனவாதத்தின் ஒருமித்த செயற்பாடே ஒரே நாடு, ஒரே சட்டம். இத்திட்டம் உடனடியாகக் கைவிடப்பட வேண்டும். இல்லையேல் நாடு பாரதூரமான விளைவுகளையே சந்திக்கும்.

“நாட்டில் இராணுவ மயப்படுத்தல், சிங்கள மயப்படுத்தல் என பல குற்றச்சாட்டுக்கள் இருக்கையில், இச்சட்டம் இன்னுமொரு படி மேலே நகர்த்தப்படுவது, சிறுபான்மை மக்களின் சாபக்கேடாகும்” என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X