2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

ஏறாவூர் வீதி புனரமைப்பு: அடையாளமிடப்பட்ட கட்டடங்களை அகற்ற அறிவுறுத்தல்

Suganthini Ratnam   / 2017 ஜூலை 06 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்,எம்.எஸ்.எம்.நூர்தீன்

கொழும்பு -மட்டக்களப்பு நெடுஞ்சாலையில், ஏறாவூர் நகர பிரதான வீதி புனரமைப்புச் செய்யப்படவுள்ள நிலையில், அந்த வீதியை அகலப்படுத்தும் பணிக்காக அடையாளம் இடப்பட்ட

கட்டடங்களை  விரைவில்  அகற்றுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
பள்ளிவாசல் ஒலிபெருக்கிகள் மூலமும் பொது அறிவித்தல் மூலமும் உரியவர்களுக்கு, ஏறாவூர் நகர சபைச் செயலாளர் எச்.எம்.எம்.ஹமீம் இன்று  அறிவித்தல் விடுத்துள்ளார்.

மேலும், அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,'கொழும்பு -மட்டக்களப்பு நெடுஞ்சாலையில், ஏறாவூர் நகர பிரதான வீதியை அகலமாக்கிப் புனரமைப்புச் செய்வது தொடர்பான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

'இது தொடர்பாக ஏற்கெனவே பிரதேச செயலகத்தில் நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டங்களில்; கடை உரிமையாளர்கள், வியாபாரிகள் உட்பட அனைத்துத் தரப்பினரின் ஆலோசனைகளும் பெறப்பட்டதுடன், இந்த வீதியை அகலமாக்குவதற்கும்  தீர்மானம் எடுக்கப்பட்டது.

'இதன் பிரகாரம், கடைக் கட்டடங்களை  அகற்றுவதற்காக கடந்த ஜுன் இறுதி வாரம்வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

'எனவே, அடையாளம் இடப்பட்டுள்ள கட்டடங்களை அகற்றுவதற்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் முடிந்துள்ளதாகவும் இன்னமும் அகற்றப்படாதுள்ள கட்டடங்களை மிக விரைவில் அகற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

'ஏறாவூர் ஒரு வர்த்தக மைய நகராக இருப்பதால், சித்திரைப் புத்தாண்டு மற்றும் நோன்புப் பெருநாளைக் கருத்திற்கொண்டு ஜுன் மாத இறுதிவரை இந்தக் கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

'புத்தாண்டு மற்றும் நோன்புப் பெருநாள் வியாபார நடவடிக்கைகள் யாவும் நிறைவடைந்துள்ளதால்,  கடை உரிமையாளர்கள் மற்றும் வியாபாரிகள் தமது கடைகளை ஏற்கெனவே இடப்பட்ட அடையாளத்தின் அடிப்படையில் அகற்றுவதற்கான நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏறாவூர் நகரை ஊடறுக்கும் கொழும்பு -மட்டக்களப்பு நெடுஞ்சாலை தற்போதிருக்கும் அளவிலிருந்து சரியாக ஓர் அடி உயர்த்தப்படவுள்ளது.

நெடுஞ்சாலையின் மத்தியிலிருந்து வலது, இடது கரைகள் 11.5 மீற்றர் அகலத்தில் 4 வழித்தடங்களுடன் இருபக்க நடைபாதைகள் மற்றும் வடிகான்களைக் கொண்டதாகவும் மத்தியில் மின் விநியோகக் கம்பங்களைக் கொண்டதாவும் கார்ப்பட் வீதியாக புனரமைப்புச் செய்யப்படவுள்ளது.  

வீதி புனரமைக்கும் நடவடிக்கைக்குள்; 607 கடைகளும்  347 வீடுகளும் 187 வெற்றுக் காணிகளும் பாதிக்கப்படுகின்றன என, உரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X