2025 மே 01, வியாழக்கிழமை

‘ஒத்து ஊதுவோர் பொறுப்பு கூறவேண்டும்’

Editorial   / 2020 செப்டெம்பர் 28 , பி.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.எல்.ரி.யுதாஜித்

அரசாங்கத்தின் ஒவ்வொரு கெடுதியான செயலுக்கும் அரசாங்கத்துக்கு ஒத்து ஊதும் தமிழ் பேசும் அரசியல்வாதிகள் பொறுப்புக் கூறவேண்டுமென, மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஶ்ரீநேசன் தெரிவித்தார்.

தற்போது அரசாங்கத்தின் அடக்குமுறைக்கான சட்ட, திட்டங்கள் ஆரம்பித்து விட்டன எனவும் கடந்த காலத் துன்பங்களை நினைத்துத் துக்கத்தை அனுஷ்டிப்பதற்கான, அழுவதற்கான அடிப்படை உரிமை கூட மறுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

சமகால அரசியல் நிலைமைகள் குறித்து இன்று (28) கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “நாட்டில் பல்லின மக்கள் வாழுகின்றார்கள் என்பதைத் தற்போதைய அரசாங்கம் உணர்ந்து செயற்படுவதாகத் தெரியவில்லை. எதிர்க்கட்சிகளின் கருத்துகளுக்கும் அரசாங்கம் செவிசாய்க்கவில்லை. பேரினப் பிற்போக்குவாதிகளின் கருவியாகவே அரசாங்கம் செயற்படுகின்றது” என்றார்.

“தொல்லியல் இடங்களைக் கண்டறிதல் என்ற போர்வையில், தமிழ் மக்களின் காணிகளைஅபகரித்து, பேரினமயமாக்கலுக்கான திட்டங்கள் ஆரம்பித்துவிட்டன. 20ஆவது யாப்புத்திருத்தம் என்பது மக்களின் ஜனநாயகத்தைக் குழி தோண்டிப் புதைக்கின்ற, சர்வாதிகாரத்தை மாலையிட்டு வரவேற்கின்ற செயற்பாடாக அமைந்துவிடும்.

“எதை விதைக்கிறோமோ அதை அறுக்க வேண்டி வரும். ஐ.தே.கட்சி, ஶ்ரீ.சு.க விதைத்தவற்றை ரணிலும், மைத்திரியும் அறுவடை செய்து நட்டப்பட்டு, தட்டுப்பட்டு நிற்கிறார்கள். இப்போது பொதுஜன பெரமுன விதைக்கிறார்கள். விதைத்தது வினையாக இருந்தால், அறுவடை தினையாகக் கிடைக்காது. ஜனநாயக நாட்டில் மனிதவுரிமை முக்கியமானது.

“எனவே, சிறுபான்மை இனங்கள் மட்டுமல்ல, சகல முற்போக்கு சக்திகளும் விழிப்புடன் இருந்து வினைத்திறனுடன் செயற்பட வேண்டும். இது காலத்தின் கட்டாயக் கடமையாகும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .