2025 மே 14, புதன்கிழமை

காணியை வழங்குமாறு கோரி உண்ணாவிரதப் போராட்டம்

Editorial   / 2018 டிசெம்பர் 20 , பி.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன், ரீ.எல்.ஜவ்பர்கான்

ஒரே குடும்பதைச் சேர்ந்த பெண்கள் மூவர், காணியொன்றை வழங்குமாறு கோரி, காத்தான்குடி பிரதேச செயலகத்துக்கு முன்னால் இன்று (20) காலை முதல் உண்ணாவிரதப் போராட்டமொன்றில் ஈடுபட்டுள்ளனர்.

காத்தான்குடி, ஆறாம் குறிச்சி ஜாமியுழ்ழாபிரீன் வீதியில் வசிக்கும் தாய், மகள், மகளின் மகள் ஆகிய மூன்று பெண்களே, இவ்வாறு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தாம் வசிக்கும் வீட்டுக்கு அருகிலுள்ள காணி, தமக்குச் சொந்தமான காணியெனவும் அக்காணியை அடைத்து, அதற்கு வேலியிட முற்பட்டபோது, காத்தான்குடி நகர சபை நிர்வாகம் அதனைத் தடுப்பதாகவும் இதனால் தாம் மிகவும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் அந்தக் காணியை எமக்குத் தர நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள் தெரிவித்தனர்.

அந்தக் காணி வெற்றுக் காணியாகக் காணப்படுவதால், அதில் பல்வேறு சமூக சீரழிவுகளுக்காக பயன்படுத்த சிலர் முற்படுவதாகவும் அப்பெண்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், காத்தான்குடி பிரதேச செயலாளரிடம் அனுமதி பெற்று, தாம் அந்தக் காணியை  அடைக்க முற்பட்டபோது, காத்தான்குடி நகர சபைத் தவிசாளரும் பிரதித் தவிசாளரும் நகர சபை நிருவாகமும் அதைத் தடுத்து நிறுத்தியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

வறுமையில் வாழும் தமக்கு, அக்காணி வேண்டுமென்றும் பெண் தலைமை தாங்கும் குடும்பமாகத் தாம் காணப்படுவதாகவும், அவர்கள் சுட்டிக்காட்டினர்.

எனவே, தமது கோரிக்கை நிறைவேறும் வரை நாம் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட மாட்டோமென, அப்பெண்கள் மேலும் தெரிவித்தனர்.

இது தொடர்பாக காத்தான்குடி நகர சபைத் தவிசாளரிடம் கேட்ட போது, குறித்த காணி, காத்தான்குடி நகர சபையின் வீதிக்குரிய காணியெனவும் அரசாங்கக் காணியை பல வருடங்களாக இவர்கள் கையகப்படுத்தி வைத்துள்ளனர் எனக் குற்றஞ்சாட்டினார்.

ஏற்கெனவே, இந்த அரச காணிக்குப் போடப்பட்டிருந்த வேலியை உடைத்து, அதைப் பொதுமக்கள் போக்குவரத்துக்காகப் பயன்படுத்தும் வீதிக்கான காணியாக பதிவு செய்துள்ளோம் என்றும் இக்குடும்பம் வசிப்பதற்கு அவர்களிடம் காணி இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மேற்படி பெண்களை, காத்தான்குடி பிரதேச செயலாளர் உதயஸ்ரீதர் நேரில் சந்தித்து, அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .