2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

காணி அபகரிப்பை ’கைவிட வேண்டும்’

Editorial   / 2018 ஜூலை 17 , பி.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

 

வடக்கு கிழக்கு மாகாணங்களில் பல்வேறு அமைப்பு ரீதியான செயற்பாடுகளின் மூலம், பொதுமக்களின் காணிகளை அரசாங்கம் அபகரிக்கிறது எனவும், அதை அரசாங்கம் நிறுத்த வேண்டும் எனவும், மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.

தமிழர் தரப்பு, காணி அதிகாரத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கையில் வனலாகா, வன ஜீவராசிகள் திணைக்களம், மகாவலி அபிவிருத்தி, தொல்பொருள் திணைக்களம், அரச காணி மீட்புத் திணைக்களம், புனித ஸ்தலங்களுக்கான நிலம் என்ற போர்வையில் காணிகளை அபகரிக்கின்றன என, அவர் மேலும் குற்றஞ்சாட்டினார்.

மட்டக்களப்பிலுள்ள அவரது அலுவலகத்தில், நேற்று முன்தினம் (16) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே, அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில், "கிழக்கு மாகாணத்தில், மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில், கிழக்கு மாகாணத்தில் காணி ஆணையாளராக இருக்கின்ற ஒருவர், வாகரையில் 500 ஏக்கர் காணியை படையினருக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்துகின்றார்.

"இதேபோன்று ரணவிரு படையினருக்காக, 25 ஏக்கர் காணியை வாகரை பிரதேசத்தில் வழங்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. இப்படி, மாவட்டத்தின் பல பிரதேசங்களில் பொதுமக்களின் காணிகளை அபகரிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. பல பொதுக் காணிகளை, படையினருக்குச் சொந்தமாக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன" எனக் குறிப்பிட்டார்.

மேலும் கருத்துத் தெரிவித்த அவர், நாட்டில் நல்லிணக்கம் ஏற்படவேண்டுமாக இருந்தால், நல்லிணக்கத்துக்கு எதிரான முரண்பாடான செயற்பாடுகளை அரசாங்கம் செய்யக் கூடாது எனவும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து அவர், "நல்லிணக்கம் என்று இன்று சொல்லிக்கொண்டு, மட்டக்களப்பில் மட்டுமல்ல அம்பாறை, திருகோணமலை, வடக்கு - கிழக்குப் பிரதேசங்களில், காணிகள் ஏதோ ஒரு விதத்தில் அரசால் பலவிதமாக அடையாளப்படுத்தப்படுகின்றன. எனவே படையினர் தமது கைக்குள் வைத்திருக்கின்ற காணிகளை விடுவிக்க வேண்டும்" எனவும் வலியுறுத்தினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X