2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

கிழக்கு ஆளுநரின் நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவிப்பு

Editorial   / 2018 ஓகஸ்ட் 01 , பி.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.எல்.ரி.யுதாஜித், வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு, மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள ஆட்சேர்ப்புத் திட்டத்துக்கு முரணாக, தற்காலிகமாகவும் நிரந்தரமாகவும் நியமனங்கள் வழங்குவதற்கு, கிழக்கு மாகாண ஆளுநர் நடவடிக்கை எடுத்துள்ளாரெனவும், அதை வன்மையாகக் கண்டிப்பதாகவும், ஈ.பிஆர்.எல்.எப்-இன் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரும் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான ஆர்.துரைரெட்ணம் தெரிவித்தார்.

உள்ளூராட்சி விடயங்கள் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் மட்டக்களப்பிலுள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (31) மாலை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர் கூறியதாவது, “2018ஆம் ஆண்டு, மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சில உள்ளூராட்சி சபைகளுக்கு? கிழக்கு மாகாண சபையின் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஊடாக, 01.01.2013 சுற்று நிருபத்துக்கு அமைவாக நிரந்தர நியமன விதிமுறைக்கு முரணாக நியமனங்கள் வழங்கப்பட்டுக்கொண்டு வருகின்றன. இந்நியமனத்தைப் பொறுத்தவரையில், இவற்றை ஆளுநர் மேற்கொள்வதாகத் தெரியவருகிறது.

"இந்நியமனம், பிரதேச ரீதியாக விண்ணப்பங்கள் கோரப்படவேண்டும். நேர்முகத் தெரிவுக் குழுவில் உள்ளூராட்சிசபையின் ஆணையாளர்கள், செயலாளர்கள் பங்குபற்றுதல் வேண்டும். இவைகள் இல்லாத முறையில், நிரந்தரமாகவும் தற்காலிகமாகவும் நியமனங்கள் வழங்கப்படுகின்றன" என்று தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், கடந்தாண்டு, மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பல உள்ளூராட்சி சபைகளுக்கு, நகரஅபிவிருத்தியின் கீழ், தமிழ்ப் பகுதிகளுக்கு நிதியொதுக்கீடு செய்யப்படவில்லை எனவும், ஓட்டமாவடி, காத்தான்குடி, ஏறாவூர், வாழைச்சேனை உள்ளிட்ட முஸ்லிம் பக்கம் பெரும்பான்மையாக பகுதிகளுக்கு 500 மில்லியன் ரூபாய்க்கு மேல் நிதி ஒதுக்கப்பட்டது எனவும் குற்றஞ்சாட்டினார்.

“மேலும், தமிழ்ப் பகுதியிலுள்ள உள்ளூராட்சி பிரதேச சபைகளுக்கு அலுவலகங்கள் அமைப்பதற்கு ஒரு முறையும், முஸ்லிம் பகுதிகளுக்கு அலுவலகங்கள் அமைப்பதற்கு இன்னொரு முறையையும், உள்ளூராட்சி அமைச்சு கையாளுகின்றது.

“மட்டக்களப்பு மாவட்டத்தில், மொத்தம் 12 உள்ளூராட்சி சபைகளில் காத்தான்குடி, ஏறாவூர் பிரதேச சபைகள் மட்டுமே தரமுயர்த்தப்பட்டன. தமிழ்ப் பகுதியிலுள்ள பிரதேச சபைகள் தரம் உயர்த்தப்படவில்லை” என்று அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X