2025 மே 14, புதன்கிழமை

குறைபாடுகளை நிவர்த்தி செய்யாத கல்வி நிலையங்களின் அனுமதி இரத்து

Editorial   / 2019 பெப்ரவரி 04 , பி.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா, ஏ.எச்.ஏ.ஹுஸைன், கே.எல்.ரி.யுதாஜித்

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் இயங்கும் கல்வி நிலையங்களில் சுட்டிக்காடப்பட்டுள்ள குறைபாடுகளை ஒரு மாத காலத்துக்குள் நிவர்த்தி செய்யாவிடின், மாநகர சபையின் கட்டளைச் சட்டத்துக்கு அமைய, அவற்றின் அனுமதி இரத்தாகுமென, மேயர் தி.சரவணபவன் தெரிவித்தார்.

மாணவர்களுக்குப் பாதுகாப்பான கல்வி நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தும் நோக்கில், மட்டக்களப்பு மாநகர சபையின் அதிகார எல்லைக்குள் இயங்கும் தனியார் கல்வி நிலையங்கள், மேயரின் பணிப்பின் பேரில், இன்று (04) சோதனைக்குட்படுத்தப்பட்டன.

குறிப்பாக ஆண் , பெண் மாணவர்களுக்கான தனியான மலசலகூடங்கள், சுத்தமான குடிநீர், வாகன தரிப்பிடங்கள், கற்பித்தல் நடைபெறும் இடத்தில் போதுமான காற்றோட்டம்,  வெளிச்சம், இருக்கை வசதிகள், கழிவகற்றல் முகாமைத்துவம், கட்டண ஒழுங்குகள் எனப் பல விடயங்கள் இதன்போது பரிசீலிக்கப்பட்டன.

பெற்றோர், மாணவர்களால் வழங்கப்பட்ட முறைப்பாடுகளுக்கு ஏற்ப இச்சோதனை நடவடிக்கைகளைத் தாம் மேற்கொள்வதாக, மட்டக்களப்பு மாநகர மேயர் தெரிவித்தார்.

பெரும் சிரமத்தின் மத்தியில் பணம் சம்பாதித்து, தமது பிள்ளைகளின் கல்வி மேம்பாடுக்காக இவ்வாறான கல்வி நிலையங்களுக்கு அனுப்பும் பெற்றோர்கள் அனைவரும் தமது பிள்ளைகள் எவ்வாறான சூழலில் கல்வியைப் பெறுகின்றார்கள் என்பதை, பெற்றோர்கள் கவனத்தில்கொள்ள வேண்டுமென்றும் மேயர் வேண்டுகோள் விடுத்தார்.

இச்சோதனை நடவடிக்கையில், மாநகர ஆணையாளர் கே .சித்திரவேல், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், சுகாதார நிலையியல் குழுவின் தலைவர் இரா.அசோக், உத்தியோகத்தர்கள், பொலிஸார் ஈடுபட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X