2021 மே 16, ஞாயிற்றுக்கிழமை

கொரோனா சிகிச்சை: மாந்தீவை வழங்குவதில்லையென தீர்மானம்

வா.கிருஸ்ணா   / 2020 மார்ச் 02 , பி.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு - மாந்தீவை, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கும் பகுதியாக மாற்றுவதற்கு அனுமதி வழங்குவதில்லையென்று, தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு, மாந்தீவு பகுதியை தெரிவுசெய்ய இலங்கை வைத்திய சங்கம் முன்மொழிந்துள்ளதாக செய்திகள் வெளியாகிய நிலையில், அது குறித்து ஆராயும் வகையிலான அவசரக் கூட்டம், மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் இன்று (02) நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவருமான எஸ்.வியாழேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர், மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், மாவட்ட அரச வைத்திய அதிகாரிகள் சங்க பிரதிநிதிகள், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி, காணி திணைக்கள அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர்.

வெளிநாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களை எவ்வாறு பராமரிப்பது, அவர்களை எங்கு தங்கவைப்பது போன்ற விடயங்கள் ஆராயப்பட்டதோடு, மாந்தீவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை அனுமதிப்பதில்லை என்றும் அதற்குப் பதிலாக மட்டக்களப்பு மாவட்டப் போதனா வைத்தியசாலையிலேயே விசேட பிரிவை உருவாக்கி, அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டம் அல்லது மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்படும்போது, அவர்களுக்கான சிகிச்சையளிக்கும் நிலையமாக மாற்றலாம் என்ற ஓர் எதிர்வுகூறலே செய்யப்பட்டதாகவும் அந்த இடத்தை தெரிவுசெய்யுமாறு கோரவில்லையெனவும், அரச வைத்திய அதிகாரிகள் சங்க உறுப்பினர்கள் இதன்போது தெரிவித்தனர்.

எனினும், அவ்வாறான இடத்தை  தெரிவுசெய்வதால் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகள் இங்குச் சுட்டிக்காட்டப்பட்டதுடன், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் திறக்கப்பட்டுள்ள விசேட கொரோனா சிகிச்சை பிரிவை மேலும் விரிவுபடுத்தி, வசதிகளை ஏற்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .