2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

கொவிட் சூழ்நிலையில் நீதிமன்ற நடைமுறைகள் குறித்து விளக்கம்

Princiya Dixci   / 2021 ஜூலை 09 , பி.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.விஜயரெத்தினம், எம் எஸ் எம் நூர்தீன்

நீதிமன்றங்களின் கட்டடத் தொகுதிகளுக்குள் தேவையின்றி அதிகளவிலான பொதுமக்கள் கூட்டமாக நிற்பதற்கோ அல்லது உள்நுழையவோ தற்போது அனுமதி இல்லை என, மட்டக்களப்பு மாவட்ட சட்டத்தரணிகள் சங்க சட்டத்தரணி பே.பிறேம்நாத் தெரிவித்தார்.

அத்துடன், கிழக்கு மாகாணத்தில் இருந்து கொண்டே வழக்குகளுக்கு சமூகமளிக்காதவர்களுக்கு எதிராக பிடிவிறாந்து பிறப்பிக்கப்படும் சந்தர்ப்பம் உள்ளதாகவும் அவர் எச்சரித்தார்.

மட்டக்களப்பில் உள்ள அவரது வீட்டில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு, நீதிமன்ற வழக்குகள் தொடர்பில் பொதுமக்கள் அனுமதிக்கப்படும் முறை தொடர்பில் விளக்கமளிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கொரோனா தொற்று அச்சநிலை காரணமாக, கடந்த இரு மாதங்களாக நீதிமன்ற நடவடிக்கைகளில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

“அதன் அடிப்படையில், நீதிச்சேவை ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையின் அடிப்படையில், நீதிமன்றங்களை நடத்துவதற்கு சில நிபர்ந்தனைகளினூடான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

“இதன்படி, மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம், மேல் நீதிமன்றம், மேல்முறையீட்டு நீதிமன்றம், களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றம், ஏறாவூர் நீதவான் நீதிமன்றம் ஆகியவற்றில் வழக்குகளுக்காக பொதுமக்கள் உள்ளெடுக்கப்படும் போது, எவ்வாறான நடைமுறைகள் பின்பெற்றப்பட வேண்டுமெனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

“இது தொடர்பான கடமை மட்டக்களப்பு சட்டத்தரணிகள் சங்கத்துக்கு உள்ளது. குறித்த நீதிமன்றங்களின் உள் வீதிகளிலோ அல்லது நீதிமன்றங்களின் கட்டடங்களினுள்ளோ எவரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

“அவ்வாறு அனுமதிக்கப்பட வேண்டுமாயின், விளக்க வழக்குகளுக்கான எதிரிகள் அல்லது சந்தேகநபர்கள் அல்லது சாட்சிகள், தங்களுடைய சட்டத்தரணிகள் மூலமாக உறுதிப்படுத்திக்கொண்டு, உள்நுழைய அனுமதிக்கப்படுவார்கள்.

“அத்துடன், அழைக்கப்படும் வழக்குகளுக்கு உரியவர்கள், நிதிமன்றத்தினுள் அனுமதிக்கப்படமாட்டார்கள். அவ்வாறு வருபவர்கள் அவர்களின் வழக்குகளுக்காக சட்டத்தரணியிடம் தொலைபேசி மூலம் அறியப்படுத்தி, சட்டத்தரணிகளால் வர சொல்லப்பட்டால் மாத்திரமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்.

“மேலும், தாவரிப்பு வழக்குகள், அவசரமாக கூட்டப்பட வேண்டிய வழக்குகள் பிணை வழக்குகள் மற்றும் குடும்ப வன்முறைகள் சம்பந்தமான வழக்குகள் ஆகியன வழமையான முறைகளில் நடைபெறும். எனினும், இந்த வழக்குகளுக்கு வருகின்றவர்களும் முழுமையாக சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றப்பட வேண்டும்.

“நீதவான் நீதிமன்றங்களில் விளக்க வழக்குகள் அழைக்கப்படும் போது, தற்போது நாட்டில் அமுலில் உள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை காரணமாக, வெளி மாகாணங்களில் இருந்து வர முடியாதவர்களுக்கு பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட மாட்டாது. ஆனால் கிழக்கு மாகாணத்தில் இருந்து கொண்டு வழக்குகளுக்கு வராதவர்களுக்கு பிடிவிறாந்து பிறப்பிக்க சந்தர்ப்பம் உள்ளது” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .