2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

காத்தான்குடி பிரதான வீதி மின்விளக்குகளுக்கான மின் துண்டிப்பு

Suganthini Ratnam   / 2016 ஜூலை 24 , மு.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன், ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு, காத்தான்குடிப் பிரதான வீதியில் 02 பிரதான மின்  இணைப்புகளுக்கான மின் பாவனைக் கட்டணத்தை நகரசபை கடந்த 03 மாதங்களாக செலுத்தத் தவறியதன் காரணமாக அந்த இணைப்புகளுக்கான மின் துண்டிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சாரசபையின் கல்லடி அலுவலக அதிகாரியொருவர் தெரிவித்தார்.

காத்தான்குடிப் பிரதான வீதியில் பொருத்தப்பட்டுள்ள மின்விளக்குகளுக்கு 03 இணைப்புகள் மூலம் மின் விநியோகிக்கப்படுகின்றது. இதில் பிரதான இரு இணைப்புகளுக்கான 7 இலட்சம் ரூபாய் மின் பாவனைக் கட்டணத்தை கடந்த 03 மாதங்களாக காத்தான்குடி நகரசபை செலுத்தவில்லை. ஆகவே, மேற்படி 02 இணைப்புகளும் கடந்த 21ஆம் திகதி துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.  

எஞ்சிய ஒரு வலயத்துக்கான மின்கட்டணம் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாயை செலுத்தத் தவறும் பட்சத்தில் அந்த இணைப்புக்கான மின் துண்டிக்கப்படுமெனவும்; அவர் கூறினார்.

இது தொடர்பில் காத்தான்குடி நகரசபைச்; செயலாளர் ஜே.சர்வேஸ்வரனிடம் கேட்டபோது, 'கடந்த பெப்ரவரி மாதம் 23ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தின்போது, உள்ளூராட்சிமன்றங்களால் பராமரிக்கப்படுகின்ற பிரதான வீதிகளுக்கான மின் இணைப்புகளின் பாவனைக் கட்டணத்தை மின்சாரசபை பொறுப்பேற்குமென்பதுடன், இவற்றுக்குரிய மின்பாவனைக் கட்டணத்தை உள்ளூராட்சிமன்றங்கள் செலுத்தத் தேவையில்லையெனக் கூறப்பட்டது. அதன் பின்னர், காத்தான்குடிப் பிரதான வீதியின் மின் இணைப்புக்களுக்கான பாவனைக் கட்டணத்தை காத்தான்குடி நகரசபை செலுத்தாமல் விட்டது.

ஆனால், தற்போது மின்சார நிலுவைப்பணம் தொடர்பான பட்டியல் அனுப்பப்பட்டுள்ளதுடன், பிரதான வீதியில் 02 மின் இணைப்புகள்; துண்டிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் உரிய அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்படவுள்ளது' எனத் தெரிவித்தார்.

காத்தான்குடிப் பிரதான வீதியில் 126 மின்விளக்குகள்; பொருத்தப்பட்டுள்ளன.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X