2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

’ஞாயிற்றுக்கிழமை காலையில் தனியார் வகுப்புகளைத் தடைசெய்யத் தீர்மானம்’

Suganthini Ratnam   / 2017 ஜூன் 15 , பி.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

அறநெறிக் கல்வியின் முக்கியத்துவம் கருதி, மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணிவரையும், தனியார் மற்றும் பிரத்தியேக வகுப்புகள் நடத்தப்படுவதைத் தடைசெய்யும் தீர்மானத்தை, மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் முன்வைக்கவுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.

தேசிய இந்துசமய அறநெறிக் கல்வி விழிப்புணர்வு வாரத்தின் இந்துசமய அறநெறிக்கல்வி கொடி தின நிகழ்வு, மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில், புதன்கிழமை (14) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியபோது, 'அறநெறிக் கல்வியானது, மனிதனின் வாழ்க்கையின் ஒழுக்கத்துக்கு மிக முக்கியமானதாக உள்ளது. அறநெறிக் கல்வி சரியான முறையில் கிடைக்காமை காரணமாகவே, வன்முறைகளும் பிரச்சினைகளும் தோன்றுகின்றன.

"எனவே, அறநெறிக் கல்வியை மாணவர்களுக்கு போதிப்பதற்காக, எதிர்வரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இதற்கான முன்மொழிவு வைக்கப்பட்டு, தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.

"கடந்த காலத்தில், இதற்குரிய பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் மற்றும் பிரத்தியேக வகுப்புகளை நடத்தாமல் இருப்பதற்கான தடை அல்லது ஒழுங்குபடுத்தல், சரியான முறையில் மேற்கொள்ளப்படவில்லை. எனவே, மீண்டும் இதனை நடைமுறைக்குக் கொண்டுவரும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்படும்' என்றார். 

'பிள்ளைகளின் கல்விக்கு, பெற்றோர் முக்கியத்துவம் கொடுக்கும் அதேவேளை, ஒழுக்கம் மற்றும் வாழ்க்கை முறையை கற்றுக்கொள்ளும் வகையிலான அறநெறிக் கல்விக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

"பாடசாலைக் கல்வி வந்தவுடன், அது பரீட்சைக்கான கல்வியாக மாறிவிட்டது.  ஆனால், அறநெறிக் கல்வியானது பிள்ளைகளின் வாழ்வியலில் தங்கியுள்ளது.  சிறு பிராயத்திலிருந்தே பண்பாடு, பழக்கவழக்கம் ஆகியன, அறநெறிக் கல்வியில் கூறப்படுகின்றது. 

"தற்போது சிறுபிராயத்தினரிடையே மதுபானக் கலாசாரம், அலைபேசிக் கலாசாரம் வந்துவிட்டது. சிறு பராயத்தில் அறநெறியில் ஒழுக்க விழுமியங்களைச் சரியாக கற்று வந்திருந்தால், இவற்றுக்கெல்லாம் தீர்வு கிடைத்திருக்கும்.

"இந்துக்கள், வாழ்வியலை முற்றுமுழுதாக ஆன்மிகத்தோடு வைக்க வேண்டியவர்களாக இருக்க வேண்டும்' என்றார். 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X