2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

நியாயப்படுத்துகிறது திணைக்களம்

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2018 மே 31 , பி.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

உன்னிச்சைக் குளத்தின் வான் கதவுகள் திறக்கப்படும் விடயத்தில், சரியான நடவடிக்கைகளை முன்னெடுத்ததாக நியாயப்படுத்தியுள்ள, நீர்ப்பாசனத் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம்.பி.எம்.அஸார், 15 அடி தண்ணீர் திறந்து விடுவதுதான் அவ்விடத்தில் செய்யும் சரியான நடவடிக்கையாகும் எனக் கருதியே, அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதெனவும் தெரிவித்தார்.

உன்னிச்சைக்குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டதால் ஏற்பட்ட அழிவுக்கு, நீர்ப்பாசனத் திணைக்களத்தின் ஒரு சில அதிகாரிகளின் பொறுப்பற்ற நடவடிக்கையே காரணம் என, உன்னிச்சை நீர்ப்பாசனத் திட்டத்தின் திட்ட முகாமைக்குழு தலைவர் கந்தையா யோகவேல் தெரிவித்த கருத்துத் தொடர்பில், அவரிடம் இன்று (31) வினவியபோதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், "கடந்த வாரம் நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின் போது, மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்களையும் விவசாயிகளையும் பாதுகாக்கும் நோக்குடன், உன்னிச்சைக்குளத்தின் வான் கதவுகள், உரிய முறையிலும் பாதுகாப்புடனும் இயக்கப்பட்டன" என அவர் தெரிவித்தார்.

இந்த நேரத்தில், தேவையான அளவு, தேவையான நேரம் வான் கதவுகள் திறக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது எனக் குறிப்பிட்ட அவர், இது இந்த மாவட்டத்தின் அனைவரின் நலன் கருதியே செய்யப்பட்டது எனவும் தெரிவித்தார்.

"எங்களுக்கு, சரியானதொரு வடிச்சல் ஆறு இல்லாதது, ஒரு மிகப் பெரிய காரணமாகும்" என்று தெரிவித்த அவர், அந்த வடிச்சலை அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், எதிர்காலத்திலும் இவ்வாறான பிரச்சினைகள் வராத வகையில், எவ்வாறு இதனைத் தீர்க்கலாம் என்பதையும் ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.

அத்துடன், உரிய நேரத்துக்கு அந்தக் குளத்தின் தண்ணீரைத் திறந்து விடாமல் விட்டிருந்தால், குளம் உடைப்பெடுத்திருக்கும் எனவும், அதனால் ஏற்படும் பாதிப்பு மிக மோசமாக இருந்திருக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X