2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

நிர்ணய விலையை மீறினால் கடும் நடவடிக்கை

Editorial   / 2020 ஏப்ரல் 25 , பி.ப. 09:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள விற்பனை நிலையங்களில் விலைப்பட்டியல் காட்சிப்படுத்தவேண்டுமெனத் தெரிவித்துள்ள மட்டக்களப்பு மாநகர சபை மேயர் தி.சரவணபவன், நிர்ணய விலைக்கு அதிகமான விலையில் விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றார்.

ஊரடங்கு காலப்பகுதியில், நடமாடும் வியாபாரம் செய்வோர், சுகாதார திணைக்களத்தின் அறிவுறுத்தல்களை பின்பற்றாவிட்டால் அவர்களின் வியாபார அனுமதி இரத்துச் செய்யப்படும் எனவும் மேயர் தெரிவித்தார்.

 மட்டக்களப்பு மாநகரசபையில் நேற்று (24) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இதனை தெரிவித்தார். இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

“இந்த அனர்த்த சூழ்நிலையை பயன்படுத்தி, பல வர்த்தகர்கள் சட்டத்துக்கு முரணாண வகையில் தமது வர்த்தகங்களை முன்னெடுத்துவருகின்றனர். அது தொடர்பிலான பல முறைப்பாடுகள் எங்களுக்கு கிடைத்துள்ளன. அதிக விலையில் பொருள்களை விற்பனை செய்வதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

“இன்று சனிக்கிழமை முதல் அனைத்து சில்லரை விற்பனை நிலையங்களிலும் பலசரக்கு கடைகள் அனைத்திலும் முன்பக்கத்தில் பொதுமக்களுக்கு தெரியக்கூடிய வகையில் விலைப்பட்டியல் காட்சிப்படுத்தப்படவேண்டும். பொருள்களின் பெயர்கள், விலைகள் தெளிவாக தெரியும் வகையில் காட்சிப்படுத்தவேண்டும் என்பதுடன், அந்த விலையிலேயே பொருள்கள் விற்பனைசெய்யப்படவேண்டும்.

“இந்த நடைமுறையை மீறிச் செயற்படும் வர்த்தகர்களுக்கு எதிராக மாநகரசபை சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கும். அத்துடன், வர்த்தக நிலையங்கள், பொருள்கொள்வனவில் ஈடுபடுபவர்களுக்கு, பொருள்கொள்வனவுக்கான சிட்டை வழங்கவேண்டும். பொருள்களின் பெயர் எழுதப்பட்டு, விலைகள் எழுதப்பட்டு, இந்த சிட்டைகள் வழங்கப்படவேண்டும். இதனை சிலர் செய்வதில்லை. இது நுகர்வோர் சட்டத்துக்கு எதிரான செயற்பாடுகளாகும். இனிவரும் காலங்களில் விற்கப்படும் பொருளும் அதன் விலைகளும் பற்றிச்சீட்டில் இருக்கவேண்டும்.

“இந்த விடயத்தில் பொதுமக்களும் தெளிவாக இருக்கவேண்டும். நீங்கள் கொள்வனவு செய்யும் அனைத்து பொருள்களுக்கும் பற்றுச்சீட்டை பெற்றுக்கொள்ளுங்கள். பற்றுச்சீட்டு இல்லாத வர்த்தக நிலையங்களில் கொள்வனவுசெய்யவேண்டாம்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X