2025 மே 13, செவ்வாய்க்கிழமை

‘பங்கவாத எதிர்ப்புச் சட்டத்தை நாம் ஏற்கோம்’

பேரின்பராஜா சபேஷ்   / 2019 பெப்ரவரி 11 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

பயங்கரவாத தடைச் சட்டத்துக்குப் பதிலாகக் கொண்டுவரப்படவுள்ள, பயங்கவாத எதிர்ப்புச் சட்டத்தை திருத்தமின்றி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு போதும் இடமளிக்காது என்று தெரிவித்துள்ள கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன், பொலிஸாருக்குக் கூடிய அதிகாரங்கள் வழங்கப்பட்டு, தன்னிச்சையாக செயற்படும் வகையிலேயே, புதிய சட்டம் உருவாக்கப்படுகின்றது என்றார்.

அவரது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட விளையாட்டு உபகரணங்கள், மட்டக்களப்பு - ஏறாவூர்ப்பற்று (செங்கலடி) பிரதேசத்தில் பதிவுசெய்யப்பட்ட  33 இளைஞர் கழகங்களுக்குக் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில், சனிக்கிழமை நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு - ஏறாவூர்ப்பற்று பிரதேச இளைஞர் சேவை அதிகாரி கந்தையா அழகுராஜா  பிரதேச உதவித் திட்டமிடல் பணிப்பாளர்  அ.கருணாகரன், கணக்காளர் ஜோர்ஜ் அன்டனி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

“இந்நாட்டிலே நீண்டகாலமாக அமுலிலிருக்கும் பயங்கரவாதத் தடைச்சட்டம் எமது மக்களை அச்சுறுத்தியது. வடக்கு, கிழக்கில் வாழும் எமது உறவுகள் இந்த சட்டத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தார்கள்” என்றுத் தெரிவித்த அவர், ஐ.நா, மனித உரிமைப் பேரவை அந்தப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் அபாயத்தை உணர்ந்து அச்சட்த்தை நீக்கவேண்டுமென  அரசிடம் வலியுறுத்தியிருந்தது என்றும் நினைவுப்படுத்தினார்.

 

இந்நிலையில், பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கும்  போர்வையில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் என்ற புதிய சட்டத்தைக் கொண்டுவருவதற்கு அரசாங்கம் முயற்சிகளை மேற்கொள்கிறது என்று சுட்டிக்காட்டிய அவர், அது ஆபத்தானது, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தைப் பயன்படுத்தி, பொலிஸார் அப்பாவிகளைக்கூட கைதுசெய்து, சித்திரவதைக்குட்படுத்துவதைத் தடுக்க முடியாது என்றார்.

 எனவே, இந்தச் சட்டத்தை, நாடாளுமன்றத்துக்குக் கொண்டுவரும்போது நாங்கள் அதனை எதிர்க்க உள்ளோம். இச்சட்டத்தின் விளைவுகள் பற்றி சட்ட வல்லுநர்கள் தற்போது மக்களுக்குத் தெளிவுபடுத்திவருகின்றனர் என்றார்.

 உலகநாடுகளில் “பயங்கரவாதிகள்” என்ற சொற்பதம்; கூடுதலாகப் பயன்படுத்தப்படுவதில்லை. “தீவிரவாதம்” என்ற பதத்தையே பயன்படுத்தகிறார்கள். ஆனால், இலங்கையில் “பயங்கரவாதிகள்” என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்கன் என்றார்.

“இந்தச் சொல்லைக் கொண்டுவந்து பங்கரவாத எதிர்ப்புச்சட்டத்தை ஜனநாயக்கத்துக்கு முரணான வகையில் எமது மக்களை பாதிப்படையச் செய்யும்” என்று தெரிவித்த அவர், கைதுசெய்தல், சித்திரவதைப்படுத்தல், தடுத்து வைத்தல் உள்ளிட்டவை மீண்டும் தலைவிரித்தாடுவதற்கு தாங்கள் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் என்றும் தெரிவித்தார்.

 “கூட்டமைப்பை மாத்திரமே, தமிழ்க் கட்சிகள் விமர்சனம் செய்கின்றது. அரசாங்கத்தை விமர்சிப்பதில்லை. புதிய அரசாங்கம் உருவாகுவதற்கு ஆதரவளித்த நீங்கள் ஏன் அமைச்சுப் பதவிகளைப் பெற்று, எமது மக்களுக்கு சேவையாற்ற முடியாது எனக் கேள்விகேட்கிறார்கள்.

“ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் எமக்கு அமைச்சுப் பதவிகளைப் தருவதற்கு தற்போதும் தயாராகவே உள்ளது” என்றுத் தெரிவித்த அவர், “ஆனால், அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சுப் பதவிகளைப் பெறுவதற்காக, எமது மக்கள் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது எமக்கு ஆணை வழங்கவில்லை. மக்களுக்கு, அமைச்சுகள் தேவை என்றால் தேசிய கட்சிகளில் போட்டியிட்ட தமிழர்களுக்கு வாக்களித்திருப்பார்கள்” என்றார்.

“தமிழ் மக்கள் இழந்த உரிமையை மீண்டும் பெற்று, இந்த நாட்டிலே தேசிய இனம் என்ற ரீதியில் சுயநிர்ணய உரிமையுடன் வாழ வேண்டும் என்றக் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும்” என்று தெரிவித்த அவர், “இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் மாத்திரமே முடியும் என்ற நம்பிக்கையில் ஆணை வழங்கினார்கள். அந்த ஆணையை, நாங்கள் ஒருபோதும் துஷ்பிரயோகம் செய்ய மாட்டோம்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X