2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

’புதிய ஆளுநருடன் இணைந்து செயற்படத் தயார்’

Suganthini Ratnam   / 2017 ஜூலை 04 , பி.ப. 01:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன், ஏ.எச்.ஏ.ஹுஸைன், பொன் ஆனந்தம், ரீ.எல்.ஜவ்பர்கான், கே.எல்.ரி.யுதாஜித், எப்.முபாரக்

கிழக்கு மாகாணத்தின் நிரந்தர அபிவிருத்திக்கும் இன ஐக்கியத்தைக் கட்டியெழுப்புவதற்கும், புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ரோஹித போகொல்லாகமவுடன் இணைந்து செயற்படுவதற்கு  கிழக்கு மாகாணசபை தயார் என, அம்மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்துக்குப் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட ரோஹித போகொல்லாகம நேற்றுப் பதவியேற்றுக் கொண்டார்.

இது தொடர்பில் அவர் நேற்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'இரு நிர்வாகங்களும் இணைந்து சுமுகமாகவும் ஒற்றுமையாகவும் திட்டங்களை முன்னெடுப்பதன் மூலம், யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாணத்தைக் கட்டியெழுப்புவது இலகுவான விடயம் என்பதில் ஐயமில்லை.

'புதிய ஆளுநர் ரோஹித போகொல்லாகம வெளியுறவுத்துறை அமைச்சராகக் கடமையாற்றிய காலத்தில், பல பயனுள்ள வெளிநாட்டு முதலீடுகளை எமது நாட்டுக்குக் கொண்டுவந்து நாட்டின் அபிவிருத்திக்கு பாரிய ஒத்துழைப்பு வழங்கியவர் என்பதை நாம் அறிவோம்.

'இம்மாகாணத்தில் வெளிநாட்டு முதலீடுகளுடன் மாகாணசபை முன்னெடுக்கும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு புதிய ஆளுநர் மேலும் வலுச் சேர்ப்பார் என்பதுடன், அவருடன் இணைந்து மென்மேலும் இம்மாகாணத்துக்குப் பல பயனுள்ள முதலீடுகளைக் கொண்டுவந்து,  இம்மாகாணத்தில்; தற்போது பிரதான பிரச்சினைகளாகவுள்ள வறுமை மற்றும் வேலையில்லாப் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க இணைந்து செயற்படுவதற்கு நாம் தயாராகவுள்ளோம்,
இம்மாகாணத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பல பகுதிகள், இன்னும் முழுமையாக அபிவிருத்தியை அடையவில்லை.  

காணாமல் போனோர் பிரச்சினை, பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பின்மை மற்றும் யுத்தம் காரணமாக கைம்பெண்களாக்கப்பட்டோர் போன்ற பலதரப்பட்ட வகையில் பாதிக்கப்பட்டவர்களுக்கான தீர்வு  இதுவரையில்  முழுமையாகக் கிடைக்கவில்லை. எனவே, இவர்களுக்குத் தீர்வைப்  பெற்றுக்கொடுக்க கிழக்கு மாகாணசபை முன்னெடுக்கும் நடவடிக்கையில், புதிய ஆளுநர் எமக்கு உறுதுணையாக இருப்பார் என்று எதிர்பார்க்கின்றோம்,

 'மேலும், இம்மாகாணத்தில் மூவினத்தவர்களும் ஒற்றுமையாக வாழ்ந்துவரும் நிலையில், நாட்டின் ஏனைய பகுதிகளைப் போன்று இங்கும் இன முறுகலை ஏற்படுத்த சில தீயசக்திகள் முயன்று வருகின்றன. இவ்வாறான சூழ்நிலையில் புதிய ஆளுநராக ரோஹித போகொல்லாகம நியமிக்கப்பட்டுள்ளமையானது, இம்மாகாணத்தில் மென்மேலும்  இன ஒற்றுமையையும் நல்லிணக்கத்தயும் வலுப்படுத்துவதற்கு வழிவகுக்கும் என நம்புகின்றேன்.

அத்துடன்,  ஒரு தேர்ந்த அனுபவமிக்க ஒரு சிறந்த அரசியல் நிர்வாகத்திறனுடைய  சிவில் சமூகத்தைச் சார்ந்த ஒருவரை ஆளுநராக நியமித்துள்ளமை தொடர்பில் நாம் ஜனாதிபதிக்கு கிழக்கு மாகாண மக்கள் சார்பாக எமது நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X