2025 மே 13, செவ்வாய்க்கிழமை

‘மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட ஓட்டோக்கள் ஒழுங்குபடுத்தப்படும்’

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2019 பெப்ரவரி 19 , பி.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மட்டக்களப்பு மாநகர சபையில் பதிவு செய்தால் மாத்திரமே, மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குள் ஓட்டோக்களை ஓட்ட முடியுமென, மட்டக்களப்பு மாநகர சபை மேயர் தியாகராசா சரவணபவன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குள் காணப்படும் ஓட்டோ சாரதிகளுக்கான கூட்டம், மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில், இன்று (19) நடைபெற்ற போதே, மேயர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து கருத்துத் தெரிவித்த மேயர், மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குள் காணப்படும் ஓட்டோக்களை ஒழுங்குபடுத்த வேண்டிய பொறுப்பு தமக்கிருப்பதாகவும் மட்டக்களப்பு ஓட்டோ சாரதிகளைப் பற்றிய முறைப்பாடுகள் தமக்கு வந்துகொண்டிருந்ததால், அவற்றை ஒழுங்குபடுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

ஆகவே, மாநகர சபை கட்டளைச் சட்டம் 272ஆம் இலக்க 32ஆம் பிரிவின் படி ஓட்டோக்களின் அனைத்துத் தரிப்பிடங்களும் மாநகர சபையில் பதிவு செய்யப்படல் வேண்டுமென்றார்.

ஓட்டோக்களை யார் ஓடுகின்றனர் என்பன போன்ற எந்தத் தகவலும் தங்களிடம் இல்லையெனவும் பொதுமக்களுக்குப் பிரச்சினை ஏற்பட்டால் நடவடிக்கை எடுப்பதற்குத் தம்மிடம் எதுவும் கிடையாதெனவும் மேயர் தெரிவித்தார்.

எனவே, முழுநேர ஓட்டோ ஓட்டுநர்கள் அனைவரும், மாநகர சபையில் பதிவு செய்து, பதிவிலக்க ஸ்ரிக்கர்களை ஓட்டோவின் பின் பக்கத்தில் ஒட்ட வேண்டுமென்றும் ஏதாவதொரு பிரச்சினை ஏற்படும் பட்சத்தில், அந்த இலக்கத்தின் மூலம் அடையாளப்படுத்தி, குறித்த ஓட்டோக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியுமென்றார்.

இதேவேளை, மேயருடனான இச்சந்திப்பை, மட்டக்களப்பு ஓட்டோ சாரதிகள் நலன்புரிச்சங்கத்தினர் பகிஷ்கரித்திருந்தனர். மாநகர சபைக்கு வெளியே, பெருமளவில் ஓட்டோ சாரதிகள் குழுமியிருந்த போதும், சந்திப்பில் கலந்துகொள்ளாமல் அவர்கள் அங்கிருந்து வெளியேறினர்.

எனினும், அக்கூட்டத்துக்கு வருகை தந்திருந்த ஏனைய ஓட்டோ சாரதிகளை வைத்துக் கூட்டம் நடைபெற்றது.

இது தொடர்பாக மட்டக்களப்பு ஓட்டோ சாரதிகள் சங்கத்தின் தலைவர் எஸ்.ஜேசுதாசன் கருத்துத் தெரிவிக்கையில், இவ்விடயம் தொடர்பில் தமது சங்கத்துடன் மேயர் பேசாமல், தமது சங்கமில்லாத ஒரு சில ஓட்டோ சாரதிகளுடன் பேசுவதைத் தாம் விரும்பவில்லையென்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X