Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
வா.கிருஸ்ணா / 2017 ஒக்டோபர் 16 , பி.ப. 04:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
மதுரோயா திட்டம் என்னும் பெயரில், மட்டக்களப்பில் பாரிய நில அபகரிப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன என, மீள்குடியேற்ற முன்னாள் பிரதியமைச்சரும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
கல்லடியில் நேற்று (15) மாலை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவித்ததாவது,
“மதுரோயா திட்டம் என்பது, மகாவலித் திட்டத்தின் கீழ் நீண்டகாலமாக உள்ளடக்கப்பட்டுள்ளது. மகாவலித் திட்டத்தின் கீழ், ஏற்கெனவே இடதுகரை வாய்க்கால், வலதுகரை வாய்க்கால் என, இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
“இடதுகரை வாய்க்கால் என்பது, ஏற்கெனவே புனரமைக்கப்பட்டு, அரலகன்வில போன்ற பொலன்னறுவை மாவட்டத்தின் அரைவாசிக்கும் மேற்பட்ட பகுதிகள் உள்ளடக்கப்பட்டு, அபிவிருத்தி செய்யப்பட்டிருந்தது.
“வலதுகரை வாய்க்கால் என்பது தொப்பிகல பிரதேசமாகும். மகாவலி அபிவிருத்தி சபை, எதுவிதத் தகவல்களையும் மட்டக்களப்பு மாவட்டத்துக்கு வழங்காமல், ஆய்வுகளை மேற்கொண்டு, தற்பொழுது அதை அமுலாக்குவதற்கான இறுதிக் கட்டத்துக்கு வந்துள்ளது. கிரான் பிரதேச சபைக்குட்பட்ட நான்கில் மூன்று பங்கு நிலப்பரப்பு உள்வாங்கப்படவிருப்பதால், இது பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தவுள்ளது.
“அத்துடன், செங்கலடி, ஈரளக்குள பிரதேசங்களும் இந்த திட்டத்துக்குள் உள்வாங்கப்படவிருக்கின்றன. மொத்தமாக 15,500 ஹெக்டெயர் நிலப்பரப்பு, இந்தத் திட்டத்தில் உள்வாங்கப்படவிருக்கின்றது.
“மதுரோயா திட்டத்தில் நீரின் கொள்ளளவு 597 எம்.சி.எம் ஆகும். வாகனேரி குளத்தில் நீர்த்தட்டுப்பாடு ஏற்படும் சமயத்தில் நீரைக் கேட்டாலும், பற்றாக்குறையைக் காரணம் காட்டி நீரை அவர்கள் வழங்க மாட்டார்கள்.இவ்வாறு நீர்ப்பற்றாக்குறை இருக்கும் தருணத்தில் இத்திட்டத்தை எவ்வாறு அமுல்படுத்துவார்கள் என்பது புரியவில்லை.
“ஆகவே, முற்றுமுழுதாக நில அபகரிப்புக்காக அமுல்படுத்தப்படுகின்ற திட்டமாகவே இதனை நாங்கள் பார்க்கின்றோம்.
இத்திட்டத்தினூடாக தொப்பிகல பிரதேசத்தில் 11,800 குடும்பங்கள் குடியேற்றப்பட வேண்டும். இவற்றில் 9,000 விவசாயக் குடும்பங்களாகும். கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலக பிரிவில் வடமுனை, ஊத்துச்சேனை,கள்ளிச்சை, பேரலாவெளி, குடும்பிமலை, முறுத்தானை மற்றும் புனானை போன்ற பிரதேசங்கள் முற்றுமுழுதாக உள்வாங்கப்படுகின்றன.
“அதேபோன்று, ஏறாவூர்பற்று பிரதேசசெயலக பிரிவில் ஈரளக்குளம் மற்றும் மகாஓயா பிரதேச செயலக பிரிவில் பொகொம்பயாய போன்ற பிரதேசங்கள் முற்றுமுழுதாக உள்வாங்கப்படுகின்றது.
“70 சதவீதம் கரும்புச் செய்கைக்கும் 30 சதவீதம் நெற்பயிர்ச் செய்கைக்குமாக, இத்திட்டத்தை அவர்கள் கொண்டுவந்திருக்கின்றார்கள்.
“மகாவலி அதிகார சபையின் ஆய்வின்படி, தற்போது அங்கு வாழ்கின்ற மக்கள் தொகை 2,883 என குறிப்பிட்டிருக்கின்றார்கள். 887 வீடுகளும் 775 குடும்பங்களும் அங்கு வாழ்கின்றனர். 775 குடும்பங்களே அங்கு இருக்கின்றன என்றால், குடியேற்றப்படவிருக்கின்ற 11,800 குடும்பங்களில் மிகுதி யார் என்ற கேள்வி அங்கு பாரிய பிரச்சினையாக உருவெடுத்திருக்கின்றது.
“மட்டக்களப்பு மாவட்ட பிரதேச அதிகாரிகள், விவசாய ஆணையாளர்கள் ஊடாக ஆவணம் வழங்கப்பட்டு தற்போது தொப்பிகல பிரதேசத்தில் செய்கை பண்ணப்பட்டிருக்கின்ற காணிகளின் அளவு, 13,638 ஏக்கர் ஆகும். ஆனால், மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் ஆய்வின்படி 2,169 ஏக்கர் காணிகளே ஆவணம் வழங்கப்பட்டு, பயிர் செய்யப்பட்டுள்ளதாகக் கூறியிருக்கின்றார்கள்.
“ஏனைய காணிகளுக்கு அத்தாட்சிப் பத்திரங்கள் இல்லை என்றும் அங்கு பயிர் செய்யப்பட்டிருக்கின்ற காணிகள் கையகப்படுத்தப்படும் என்றும் கூறியிருக்கின்றார்கள்.
“இது தொடர்பில் மட்டக்களப்பில் உள்ள புத்திஜீவிகளுக்குத் தெளிவை ஏற்படுத்தியுள்ளோம். மட்டக்களப்பு மாவட்ட மக்கள் விழிப்படையவேண்டும். இதற்கு எதிரான போராட்டங்களை முன்னெடுக்காவிட்டால், நிலங்கள் பறிபோவதை யாரும் தடுக்கமுடியாது” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
41 minute ago
1 hours ago
1 hours ago