2025 மே 13, செவ்வாய்க்கிழமை

மத்தியஸ்த சபையை உருவாக்க நடவடிக்கை

Kogilavani   / 2016 மார்ச் 13 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

காணிப் பிணக்குகள் தொடர்பான மத்தியஸ்த சபையை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுச் செயலாளர் டி.எம்.கருணாரத்ன தெரிவித்தார்.

1988 ஆம் ஆண்டின் 72 ஆம் இலக்க மத்தியஸ்த சபைகள் சட்டத்தின் கீழான 2003 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க விசேட பிணக்குகள் மத்தியஸ்தர்கள் குழாம் சட்டத்தின் பிரகாரம் இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதற்கமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தின் காணிப் பிணக்கு தொடர்பான மத்தியஸ்த சபைக்கு, தவிசாளர்கள் மற்றும் உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான நேர்முகப் பரீட்சைகள், கடந்த வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழு நீதியமைச்சின் கீழ் இயங்கி வருகின்றது. இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் காணிப் பிரச்சினைகள் குறித்து 17 ஆயிரத்து 896 முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக காணி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்த எண்ணிக்கை கிழக்கு மாகாணத்தில் காணிப் பிரச்சினைகள் தொடர்பாக கடந்த 2013, 2014, 2015 ஆகிய மூன்று ஆண்டுகளில் முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகளாகும் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

போருக்கு பின்னர் நல்லிணக்கததை ஏற்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் தேசிய நல்லிணக்கத்துக்கான ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை, கிழக்கு மாகாணத்தில் அமுல்படுத்தும் நடவடிக்கையின்போது இந்த பிரச்சினைகள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி திருகோணமலை மாவட்டத்தில் 3428, அம்பாறை மாவட்டத்தில் 9453, மட்டக்களப்பு மாவட்டத்தில் 5015 என்ற எண்ணிக்கையில் காணி தொடர்பான பிரச்சினைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.

அதேநேரம் கிழக்கு மாகாணத்தில் காணி இழந்தவர்களுக்கான காணிப்பகிர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் காணி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் 1256, மட்டக்களப்பு மாவட்டத்தில் 2029, அம்பாறை மாவட்டத்தில் 831 காணித் துண்டுகளும் வழங்கப்பட்டுள்ளன.

ஒட்டுமொத்தமாக 4115 காணித்துண்டுகள் கிழக்கு மாகாணத்தில் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. இதேவேளை திருகோணமலையில் 365, அம்பாறையில் 294, மட்டக்களப்பில் 1127 என்ற அடிப்படையில் கிழக்கு மாகாணத்தில் 1786 அரச காணிப் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளன என காணி அமைச்சு மேலும் கூறியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X