Johnsan Bastiampillai / 2021 ஜூன் 22 , பி.ப. 04:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
கே.எல்.ரி. யுதாஜித்
மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதான மேய்ச்சல் தரையாக விளங்கும் மயிலத்தமடு மாதவணை பிரதேசத்தில், பிற மாவட்டத்தவரின் அத்துமீறிய சேனைப்பயிர்ச்செய்கை செயற்பாடுகள், தொடர்ந்தவண்ணம் உள்ளமை தொடர்பில், அவதானங்களை மேற்கொள்வதற்காக ஞாயிற்றுக்கிழமை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கோவிந்தன் கருணாகரம், இரா. சாணக்கியன் ஆகியோர் விஜயம் செய்து நிலைமைகளை அவதானித்திருந்தனர்.

அத்துமீறிய சேனைப் பயிர்ச்செய்கை செயற்பாடுகள் தொடர்பில், பாராளுமன்ற உறுப்பினர்களால் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், கடந்த பெப்ரவரி மாதம் 28ஆம் திகதியுடன் அங்கிருந்து சேனைப் பயிர்ச்செய்கையாளர்கள் விலகிச் செல்ல வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டதோடு, மே 12ஆம் திகதி மீண்டும் வழக்கு எடுத்துக் கொள்ளப்படவிருந்த நிலையில், கொரோனா நிலைமை காரணமாக வழக்கு பிற்போடப்பட்டிருந்தது.
அத்துமீறிய சேனைப் பயிர்ச்செய்கையாளர்கள் இதுவரை அங்கிருந்து முற்றாக விலகவில்லை எனவும் மீண்டும் பயிர்ச்செய்கை மேற்கொள்வதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் அவ்விடத்தை மேய்ச்சற்றரையாகப் பயன்படுத்தும் பண்ணையாளர்களால் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அவ்விடயங்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்கும் வழக்கு விடயங்கள் தொடர்பில் மேலதிக தகவல்களைத் திரட்டும் பொருட்டும் பாராளுமன்ற உறுப்பினர்களின் விஜயம் அமைந்திருந்தது. மேற்படி விஜயம் குறித்து, பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் ஜனா கருத்துத் தெரிவிக்கும் போது கூறியதாவது:
மட்டக்களப்பில் அதிக மாடுகளை மேய்க்கின்ற மேய்ச்சற்றரையாக இது காணப்படுகின்றது. இந்தப் பிரதேசத்தில் அத்துமீறிச் சேனைப் பயிர்ச்செய்கை செய்பவர்களை வெளியேற்றுவதற்காக பண்ணையாளர்கள் சார்பில், நாங்கள் வழக்குத்தாக்கல் செய்திருக்கின்றோம்.
வழக்கு, மே மாதம் 12ஆம் திகதி தவணையிடப்பட்டு, அதன்போது பயிர்ச்செய்கையாளர்கள் இப்பிரதேசத்தில் இருந்து வெளியேறிவிட்டார்களா என்று உறுதிப்படுத்தும் படியாகவும் அரச தரப்பு சட்டத்தரணிக்கு பணிக்கப்டடது. இவ்வாறான நிலையில், இங்கு நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாக, முற்றாக சேனைப் பயிர்ச் செய்கையாளர்கள் வெளியேறவில்லை. ஆங்காங்கே பள்ளப் பிரதேசங்களில் பயிர்ச்செய்கைகள் மேற்கொள்ளப்படுவதை அவதானித்தோம். அதற்கும் மேலாக எதிர்வரும் மாரி காலத்தில், மீண்டும் பயிர்ச்செய்கை மேற்கொள்வதற்கான ஆயத்தங்கள் நடைபெறுவதையும் அவதானிக்க முடிகின்றது. இதனை நாங்கள், அடுத்துவரும் வழக்குத் தவணையின்போது, எமது சட்டத்தரணி ஊடாக நீதிமன்றுக்குத் தெரியப்படுத்த இருக்கின்றோம்.

இந்த அரசாங்கம், திட்டமிட்டு இந்த வேலையை, ஆளுநருக்கூடாக ஊக்குவிக்கிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரமல்ல வடக்கு, கிழக்கு தமிழ் மக்களை எந்தளவுக்கு அடிமைப்படுத்தி, துன்புறுத்த முடியுமே அந்தளவுக்குத் துன்புறுத்துகின்றது இந்த அரசு.
மேய்ச்சற்றரை உள்ளிட்ட எமது மக்களின் பல பொதுப் பிரச்சினைகளில், எமது மாவட்டத்தில் இருக்கும் அரசு சார்பான இரண்டு பிரதிநிதிகளும் கவனம் கொள்வதாக இல்லை. மாவட்டத்தில் நிலவுகின்ற தொல்பொருள், மேய்ச்சற்றரை போன்ற பிரச்சினைகளில் இவர்கள் இருவரும் தலையிடாமல் இருப்பது கவலைக்குரியது. இவ்வாறான பிரச்சினைகளில் மக்களுக்காக அவர்கள் முன்வர வேண்டும். ஆனால், நாங்கள் அவ்வாறிருக்க மாட்டோம். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, அரசாங்கத்தால் மக்களுக்கு ஏற்படுத்தப்படும் அநியாயங்களை எப்போதும் தட்டிக் கேட்கும் என்று தெரிவித்தார்.
இந்த விஜயத்தின்போது, பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கிழக்கு மாகாண சபை முன்னாள் பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், இலங்கை தமிழரசு க் கட்சியின் வாலிபர் முன்னணித் தலைவர் கி. சேயோன் உட்பட பலரும் சமூகமளித்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .