2025 மே 13, செவ்வாய்க்கிழமை

மாநகரசபை நகரத்துக்குள் இலவச ஓட்டோ சேவைகள்; மேயர் அறிவிப்பு

கனகராசா சரவணன்   / 2019 பெப்ரவரி 21 , பி.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு ஓட்டோ சங்கங்கள் ஒரு கட்டுப்பாட்டுக்குள் வராமல்,  சட்டத்துக்கு முரணாகச் செயற்படுமாயின், மாநகரசபை பெறுப்பெடுத்து, நகரத்துக்குள் மிக விரைவில் இலவச ஓட்டோ சேவையை ஆரம்பிக்குமென, மட்டக்களப்பு  மாநகர மேயர் தியாகராஜா சரவணபவன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு ஓட்டோ சாரதிகள் நலன்புரிச் சங்கத்துக்கு  எதிராக, மட்டக்களப்பு மாநகர மேயர் செயற்படுவதாகத் தெரிவித்து, அச்சங்கத்தினரால் நடத்தப்பட்ட ஆர்பாட்டம் தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், மட்டக்களப்பு மாநகரசபை எல்லைக்குள், ஓட்டோ சாரதிகள் பலர், நியாயமாக நடந்துகொண்டாலும் சிலரது செயற்பாடு முறைப்பாட்டுக்குரியதாகிறது என்றார்.

இதனால் ஓட்டோ சங்கங்களுடன் கலந்துரையாடல் ஒன்றுக்கு எழுத்து மூலம் அறிவித்தல் விடுத்ததாகவும் அதில் ஓட்டோ சாரதிகள் எழுவர் மாத்திமே கலந்துகொண்டிருந்தனர் எனவும் அவர் தெரிவித்தார்.

இதனையடுத்து, அனைவரையும் அழைக்கவேண்டிய நிர்ப்பந்தம் காரணமாக, ஓட்டோ சங்கச் சாரதிகளைக் கலந்துரையாடலுக்கு வருமாறு, பகிரங்க அறிவித்தல் விடுக்கப்பட்டதாகவும் கடந்த 19ஆம் திகதி, இச்சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இச்சந்திப்புக்கு வருபவர்களின் பெயர்கள் பதிவது வழக்கமாக இருந்த போதிலும், ஓட்டோ சங்கம் என்று செல்லுபவர்கள் தாங்கள் பதியமாட்டோம், பதியாமல் உள்வருவோம் எனத் தெரிவித்தமையை அடுத்து, அவர்கள் வெளியில் நிற்க, ஏனையவர்களுடன் அக்கூட்டம் நடைபெற்றதாகவும் மேயர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், அனைத்து ஓட்டோ சாரதிகளும் தமது வியாபார நடவடிக்கை தொடர்பில் மாநகரசபையில் பதியப்படவேண்டுமென சில விதிமுறைகளை விதித்தாகவும் ஆனால் இதுவரை எந்தவொரு ஓட்டோ சாரதிகளும் அவ்வாறு பதியவில்லை எனவும் இது பாரிய சட்டவிரோதமான செயற்பாடு எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும், மாநகரசபை நியதிச் சட்டத்தை அமுல்படுத்தும் போது, அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் அதனை அனுசரித்துப் போகவேண்டுமெனவும் வெறுமனமே அரசியல் நடத்துவதற்காக, சட்டத்தை அமுலாக்காதே என்று சொல்வதற்கு அரசியல்வாதிகளுக்கு அருகதையில்லை எனவும் அவர் சாடினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X