2025 மே 02, வெள்ளிக்கிழமை

’மாற்று அணியெனக் கூறுவது நன்மை பயக்காது’

Editorial   / 2020 ஜூன் 15 , பி.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா, கே.எல்.ரி.யுதாஜித்

“ஒவ்வொரு மாவட்டத்திலும் மாற்று அணியெனக் கூறி, ஒவ்வொருவரும் ஆசனத்தை கைப்பற்றிச் செல்வது எந்த விதத்திலும் மக்களுக்கு நன்மை பயக்காது” என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

நாடு முழுவதிலும் வித்தியாசமானதொரு ஆட்சி முறையொன்றை அமைக்கத் தொடங்குவது தெரிகின்றதெனவும் விசேடமாக கிழக்கில் இது குறித்த கரிசனை எழுந்திருக்கின்றதெனவும் அவர் தெரிவித்தார்.

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர்களின் விசேட கலந்துரையாடல்,  தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு காரியாலயத்தில், நேற்று (14) மாலை நடைபெற்றது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளருமாகிய கி.துரைராசசிங்கம் தலைமையில் இக்கலந்துரையாடல் நடைபெற்றது.

இதன்போது தொடர்ந்து கருத்துரைத்த சுமந்திரன், “கிழக்கு மாகாணத்தில் தொல்லியல் சம்பந்தமாக ஒரு செயலணி அமைக்கப்பட்டிருக்கின்றது. இதன்மூலம், நாட்டில் இராணுவ ஆட்சி வெளிப்படையாகவே மேலோங்கியிருக்கின்றது.

“பேரினவாதம் என்பது ஓர் அணியில் நின்று, மற்றவர்களை ஒடுக்குகின்ற மனப்பாங்குடன் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. வட, கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் சார்பாக நாங்கள் ஓர் அணியாக செல்வோம். அதேபோன்று, மலையகத்திலுள்ள பிரதிநிதிகளும் ஓர் அணியாக வரவேண்டும். தமிழ் பேசும் முஸ்லிம் உறுப்பினர்களும் நாடாளுமன்றத்தில் இணைந்துசெயற்படவேண்டும்.

“இந்த நாடு, ஒரே நாடாக இருக்கவேண்டுமென, பெரும்பான்மையினர் விரும்புகின்றார்கள். ஒரே நாடாக இருக்கவேண்டுமானால், நாட்டில் வாழும் அனைத்து மக்களும் இந்த நாட்டின் பிரஜைகள் என்பதை முழுமையாக நம்பி வாழவேண்டும். அதற்கான சூழ்நிலைஉருவாக்கப்படவேண்டும். அதற்கேற்றாற்போல் அதிகாரங்கள் பகிரப்படவேண்டும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .