2025 மே 21, புதன்கிழமை

‘முஸ்லிம்கள் உட்பட அனைத்து மக்களுக்காக சுவாமி விபுலாநந்தர் வாழ்ந்தார்’

Editorial   / 2017 ஒக்டோபர் 09 , மு.ப. 02:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா. கிருஸ்ணா, ஏ.எச்.ஏ. ஹுஸைன்  
சுவாமி விபுலாநந்த அடிகளார், முஸ்லிம்கள் உட்பட அனைத்து மக்களுக்காகவும் தனது வாழ்வை அர்ப்பணித்திருந்தார் என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.   

சுவாமி விபுலாநந்தரின் 125 ஆவது ஆண்டு ஜனன தினத்தை முன்னிட்டு, மட்டக்களப்பில் மூன்று தினங்களாக நடாத்தப்பட்ட, சுவாமி விபுலானந்தர் மாநாட்டின் இறுதி நிகழ்வு, சனிக்கிழமை (07) மாலை, சுவாமி விபுலாநந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் இராஜதுரை அரங்கில், கல்வி அமைச்சின் முன்னாள் செயலாளர் உடுவை தில்லை நடராஜா தலைமையில் நடைபெற்றது.  

இந்து கலாசாரத் திணைக்களமும், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்ற மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சும் கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலாநந்த அழகியல் கற்கைகள் நிறுவகமும் இணைந்து, இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.  

இந்த நிகழ்வில், இரா.சம்பந்தன் கலந்துகொண்டு சிறப்பித்தார்.  

இங்கு தொடர்ந்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர்,   

“அனைத்துக்கும் அரசாங்கத்தை நம்பிக்கொண்டிருக்காமல் தமிழ் மொழி, இந்து மதம், கலை கலாசாரம் ஆகியவற்றைப் பொறுத்தவரையில், எங்களது சொந்தக் கூட்டு முயற்சி ஊடாக, அவற்றை முன்னேற்றி, பாதுகாத்துக்கொள்வதற்கு, அனைவரும் இயன்ற பணியை மேற்கொள்ளவேண்டும்.   

“சுவாமி விபுலாநந்தர் பல மொழி நூல்களை மொழிபெயர்த்துத் தந்துள்ளார்.சுப்ரமணிய பாரதியின் பல பாடல்களை, ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்துள்ளார். வில்லியம் ஷேக்ஸ்பியரின் ஆங்கில நூல்களை தமிழுக்கு மொழிபெயர்த்தார்”.   

“அனைத்து மக்களும், அனைத்து மொழிகளிலும் வெளிவரும் விடயங்களை அறிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக, இவ்வாறான மொழிபெயர்ப்புப் பணிகளை மேற்கொண்டார்”.  

“மைலாப்பூரில் உள்ள இராமகிருஷ்ண மிஷனில்தான், விபுலாநந்தர் என்ற பெயரைப்பெற்றார்”.  

“வறுமை நிலையில் இருந்த இளைஞர்கள் தொடர்பில், சுவாமி விபுலாநந்தர் அதிகளவில் அக்கறை செலுத்தினார். அனைத்து மக்களுக்கும் முடிந்தளவு சேவையாற்றவேண்டும் என்ற கொள்கையுடன் செயற்பட்டு வந்தார்”.  

“அவரைக் கௌரவிக்கும் வகையில், இலங்கையிலும் ஜேர்மனியிலும் முத்திரைகள் வெளியிடப்பட்டன. சுவாமியினுடைய கொள்கைகள், படிப்பினைகள், செயற்பாட்டின் மூலமாக, மனித சமுதாயத்துக்கு ஏற்பட்ட நன்மைகள் மாற்றமடையக் கூடாது; அவை அழியக் கூடாது; அதை அப்படியே அடியொற்றி, மக்கள் அறிந்திருக்க வேண்டும். இவ்விதமான செயற்பாடுகளினூடாக, அவருடைய வாழ்க்கைப் படிப்பினைகள், சேவைகள், சிந்தனைகள் மக்களிடையே பரப்பப்படுகின்றன. அதன் மூலம் மக்கள் நன்மையடைவார்கள்”.  

“கல்விமான் அறிஞர் ஏ.எம்.ஏ. அஸீஸுடன் இணைந்து, வறிய முஸ்லிம் மக்களுக்காக விபுலாநந்தர், தனது பங்களிப்பைச் செய்வதற்கு பின்னிற்கவில்லை”.  

“பொதுவாக மக்களுக்கு கல்வியளிப்பதில் அவர், பாரிய பங்களிப்புகளைச் செய்திருந்தார். விசேடமாக வடக்கு, கிழக்கில் பல பாடசாலைகளை ஆரம்பித்தார்” என்று இரா. சம்பந்தன் அங்கு குறிப்பிட்டார்.  

இந்நிகழ்வில், சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கி.துரைரெட்னசிங்கம், சுவாமி விபுலாநந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி சி. ஜெய்சங்கர், முன்னாள் பேராசிரியர் எஸ். மௌனகுரு, பேராசிரியர் சண்முகதாஸ் உட்பட ஆன்மீகத் தலைவர்கள், தமிழ் அறிஞர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர். இதன்போது கலை நிகழ்வுகள் நடைபெற்றதுடன் எதிர்க்கட்சித் தலைவர் கௌரவிக்கப்பட்டதுடன், விபுலாநந்தரின் யாழ்நூலும் வழங்கிவைக்கப்பட்டது.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .