2025 மே 14, புதன்கிழமை

மீனவர்களின் வாழ்வாதாரத்தை சுரண்டாதீர்கள்

Niroshini   / 2016 மார்ச் 22 , மு.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா,எஸ். பாக்கியநாதன்

'மீனவர்களின் வாழ்வாதார இடமாகவிருக்கும் தமது பகுதியை வேறு நபர்களுக்கு வழங்கி தமது வாழ்வாதாரத்தை சுரண்ட வேண்டாம்' என பாலமீன்மடு பகுதி மீயவர்கள் கோரிக்கைவிடுத்தனர்.

மட்டக்களப்பு, பாலமீன்மடு பகுதியில் மீனவர்களின் காணிகள் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு குத்தகைக்கு வழங்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் மனித கழிவுகள் மற்றும் மனித உடலங்களை எரிக்கும் நிலையம் அமைக்கும் பணியை நிறுத்தக்கோரியும் அப்பகுதி மக்களால் இன்று செவ்வாய்க்கிழமை காலை ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

பாலமீன்மடு பிரதேசத்தினை சேர்ந்த பொது அமைப்புகள் மற்றும் மகளிர் அமைப்புகள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.

'பாலமீன்மடு பகுதியில் மூன்று ஆலயங்கள் உள்ள பகுதியில் மனித கழிவுகள் மற்றும் மனித உடலங்களை எரிக்கும் நிலையம் அமைக்கப்படுவதை உடனடியாக இடைநிறுத்த வேண்டும்.

அதேபோல், சுனாமி அனர்த்தத்துக்கு முன்னர் இப்பகுதியில் இருந்த ஐம்பது மீனவர்களின் காணிகளை சுற்றுலாவிடுதி அமைப்பதற்காக நிறுவனம் ஒன்றுக்கு குத்தகைக்கு வழங்க எடுக்கப்படும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும்' என ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதன்போது, ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்துக்கு வருகைதந்த மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், கிழக்கு மாகாண சபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் ஆகியோர் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடினர்.

இதையடுத்து,  மாவட்ட அரசாங்க அதிபருடன் தொடர்புகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், குறித்த மக்களின் பிரச்சினைகள் குறித்து எடுத்துக் கூறியதைத் தொடர்ந்து, இது தொடர்பில் நடவடிக்கையெடுக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினரிடம் மாவட்ட அரசாங்க அதிபர் உறுதிமொழியளித்தார்.

இதை அடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X