2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

முன்னாள் போராளிகளின் உயிரிழப்பு சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது: யோகேஸ்வரன்

Gavitha   / 2016 ஓகஸ்ட் 08 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா சபேஷ்

'புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்ட முன்னாள் போராளிகள்,  மர்மமான முறையில் உயிரிழந்து வருவது மக்கள் மத்தியில் பாரிய சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது. குறித்த மரணங்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு உண்மை  கண்டறியப்பட வேண்டும்' என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு கட்டுமுறிவு கிராமத்தின் அபிவிருத்தி தொடர்பாக, நேற்று ஞாயிற்றுக்கிழமை (17) மாலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

'புனர்வாழ்வு பெற்ற போராளிகள் அனைவரும் சர்வதேச வைத்திய நிபுணர் குழுவினால் பரிசோதனைக்குட்படுத்தப்பட வேண்டும். இறுதிக்கட்ட யுத்த்தின் போது போராளிகள் கைது செய்யப்பட்டதுடன் பலர் சரணடைந்தனர். அவர்கள் பல புனர்வாழ்வு முகாம்களில் புனர்வாழ்வுக்குட்படுத்தப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்டிருந்தனர்.

இவ்வாறு புனர்வாழ்வுக்குட்படுத்தப்பட்ட, தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறை மகளிர் பிரிவுத் தலைவியாக இருந்த தமிழினி, சிறிது காலத்துக்களுள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அந்தச் சம்பவம் பெரிதுபடுத்தப்படவில்லை. ஆனால் தற்போது முன்னனிப் போராளிகள் ஒவ்வொருவராக மர்மமான முறையில் மரணமடைந்து வருவது மக்கள் மத்தியிலும் முன்னாள் போராளிகள் மத்தியிலும் சந்தேக நிலையைத் தோற்றுவித்துள்ளது' என்று அவர் கூறினார்.

'புனர்வாழ்வு முகாம்களில் விஷ ஊசி ஏற்றப்பட்டுள்ளதாகவும் உணவில் விஷம் கலக்கப்பட்டதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகிறன. இந்த உயிரிழப்புக்களின் உண்மை நிலையை அறிவதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். புனர்வாழ்வு பெற்றோரின் உடல் ஆராக்கியம் குறைவடைந்து வருகின்றது' என்று அவர் குறிப்பிட்டார்.

'யுத்தம் முடிவுக்கு கொண்டுவந்து 7 ஆண்டுக்கள் நிறைவடைந்த நிலையிலும் சமூகத்துடன் இணைக்கப்பட்ட போராளிகள், தொடர்ந்தும் இராணுவம் மற்றும் புலனாய்வுத் துறையினரின் கண்காணிப்பிலே உள்ளனர்' என்றும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X