2025 மே 13, செவ்வாய்க்கிழமை

வடக்கு, கிழக்கில் குற்ற செயல்கள் அதிகரித்துள்ளன

Sudharshini   / 2016 பெப்ரவரி 27 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

- வடிவேல் சக்திவேல்

தற்போது வடக்கு கிழக்கில் காலாசாரங்கள் மாற்றி விட்டன. மேலும், குற்றச்செயல்கள் அதிகரித்து வருகின்றன. பாடசாலை மாணவிகள் மீதான துஷ்பிரயோகங்களும் அதிகரித்துள்ளன. யாழ்ப்பாணத்தில் வித்தியா, வவுனியாவில் கிருஷ்ணவி என இன்னும் எத்தனை வித்தியா, கிருஷ்ணவி பலியாகவுள்ளனர் என தெரியவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போதைய கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோ.கருணாகரம் தெரிவித்தார்.

 மட்.திருப்பழுகாமம், கண்டுமணி மகாவித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி வெள்ளிக்கிழமை (26) மாலை நடைபெற்றது. வித்தியாலய அதிபர் எஸ்.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'மாணவர்கள், இளைஞர்கள் மாத்திரமல்ல, முதியவர்களும் உடற் பயிற்சிகளில் ஈடுபட்டால் நாட்டில் சுகாதாரத்திற்கு ஓதுக்கீடு செய்கின்ற நிதியைக் குறைக்கலாம்.  

இந்நிலையில், எமது பிரதேசங்கள் உரியமுறையில் அபிவிருத்தி செய்யப்பட வேண்டுமாக இருந்தால், இந்நாட்டில் சமஷ்டி ஆட்சி கொண்டுவரப்படல் வேண்டும். கடந்த ஜனவரி 9ஆம் திகதி இந்நாட்டு நாடாளுமன்றம் ஓர் அரசியல் சாசன சபையாக மாற்றப்பட்டுள்ளது. இதனூடாக தனிமனித அராஜக ஆட்சி இல்லாமல் செய்யப்பட்டு, ஜனாதிபதிக்குள்ள அதிகாரங்கள் குறைக்கப்பட இருக்கின்றன.

புரையோடிப் போயுள்ள எமது இனப்பிரச்சனைக்கு தீர்வு  காண்பதற்கு மாவட்டம் தோறும் ஒருகுழு மக்களிடம் சென்று ஆலோசனைகளைப் பெற்றுக் கொண்டு வருகின்றது. 1989 ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்நாட்டிலே நடைபெற்ற பழைய தேர்தல் முறைமை தற்போது புதிய தேர்தல் முறைமையாகக் கொண்டு வரப்படவுள்ளது. இந்நிலையில் இலங்கை நாட்டுக்கு புதிய அரசியல் யாப்பு வரையப்பட்டு இனப்பிரச்சனைக்கான தீர்வும் வழங்கப்பட இருக்கின்றது. அத்தோடு அதிகாரப் பகிர்வு ஏற்படுத்தப்படவுள்ளது என எமது தலைவர் இரா.சம்மந்தன் தெரிவித்துள்ளார்.

 எனவே, இவ்வாண்டு இறுதிக்குள் எமது இனப்பிரச்சனைக்கான தீர்வுகள் கிடைத்து விடும். அதனூடாக அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும். அவற்றுள் காணி அதிகாரம், பொலிஸ் அதிகாரம், என்பன எமது கைக்குள் வரவேண்டும்.

எனவே, எது எவ்வாறு அமைந்தாலும் எமது மாணவர்களின் கல்வித்தரங்களை உயர்த்தினால் தான் எமது அழிந்துபோன உயிர்களைத்தவிர அனைத்தையும் மீளப்பெற்றுக் கொள்ளமுடியும்.  கடந்த காலங்களில் இந்த நாட்டை தமிழ் அரசர்கள் ஆண்டிருப்பதாக பல சரித்திரங்கள் கூறுகின்றன. எனவே, மாணவர்கள் சிறந்த கல்விமான்களாகவும் ஒழுக்கசீலர்களாகவும் மிளிர வேண்டும்' என அவர் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X