2025 மே 22, வியாழக்கிழமை

‘வாக்களித்திருந்தால் அதிகாரத்தை கைப்பற்றியிருப்போம்’

Editorial   / 2017 செப்டெம்பர் 27 , பி.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

“கடந்த காலத்தில் தமிழர்கள் கிழக்கில் அதிகளவில் வாக்களித்திருந்தால் கிழக்கு மாகாணசபையின் ஆட்சி அதிகாரத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியிருக்கும்” என, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மார்க்கண்டு நடராஜா தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட களுவாஞ்சிகுடி நகரின் மணல் வீதியை காபட் வீதியாக அமைக்கும் பணிகள் ஆரம்பித்துவைக்கப்பட்டது. இதன்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

“கிழக்கு மாகாணசபையின் ஆட்சி ஆரம்பிக்கப்பட்டது தொடக்கம் நாங்கள் எதிர்க்கட்சியில் அமர்த்தப்பட்டோம். அந்தவேளையில், எதனையும் செய்யமுடியாத நிலையிலேயே நாங்கள் இருந்தோம்.

“தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் மஹிந்தவின் ஆட்சி அதிகாரம் மாற்றப்பட்டதன் காரணமாக கிழக்கு மாகாணசபையிலும் மாற்றம் ஏற்படுத்தப்பட்டது. இந்த நிலையில் 11 உறுப்பினர்களைக் கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மாகாண முதலமைச்சர் பதவியை பெற்றுக்கொள்ளாமை தொடர்பில் பல்வேறு தரப்பினரும் கேள்வியெழுப்பியிருந்தனர். இதுவொரு நியாயமான கேள்விதான். ஆனால் கிழக்கு மாகாணசபையில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 37. அதில் நாங்கள் 11பேர். 26 பேர் எங்களுக்கு எதிரானவர்கள். இதுவே உண்மை நிலைவரம்.

“எங்கள் 11பேருடன் அன்று ஐக்கிய தேசிய கட்சியும் இணைந்துகொண்டது. ஐ.தே.க நான்கு உறுப்பினர்களுடன் 15 பேரே காணப்பட்டோம். ஏனையவர்கள் அனைவரும் ஒருமித்த குரலுடன் செயற்பட்ட காரணத்தால் எங்களால் ஏதும் செய்யமுடியாத நிலையிருந்தது.

“கிழக்கு மாகாணசபையில் 37 பேர் உள்ள நிலையில், அதில் அரைவாசிக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருக்கும்போதே மாகாணசபையின் ஆட்சியை நாங்கள் பெற்றிருக்கமுடியும். அதற்கான சந்தர்ப்பம் எங்களுக்கு சிறிதளவும் கிடைக்கவில்லை.

“எமது மக்கள் குறைந்தளவு வாக்களித்தமையும் சிலர் மாற்றுக்கட்சிகளுக்கும் மஹிந்த அரசுக்கம் வாக்குகளை பறித்து அந்த கட்சிகளின் அங்கத்துவத்தை அதிகரித்தார்கள். மிகவும் குறைந்தளவிலேயே வாக்களிப்பு வீதம் இருந்தது. அதிகளவு வாக்களிப்பு இடம்பெற்றிருந்தால் மூன்று ஆசனங்களையாவது அதிகளவில் பெற்று ஆட்சி அதிகாரத்தில் இருந்திருப்போம்.

“நாங்கள் முதலமைச்சரைப் பெற்றுக்கொள்வதற்காக பல்வேறு பிரயத்தனங்களை மேற்கொண்டோம். ஆனால் வெற்றியளிக்கவில்லை. ஒரு கட்டத்தில் உதுமாலெப்பை, சந்திரகாந்தன் போன்றவர்வர்கள் முஸ்லிம் காங்கிரஸூடன் இணைந்து ஆட்சியமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்திருந்தார்கள்.

“அந்த அடிப்படையில், நாங்கள் ஆட்சியின் கீழ் இணைந்துகொண்டோம். கிழக்கு மாகாணசபையில் இனவிகிதாசாரத்தின் அடிப்படையில் அபிவிருத்திகளும் வேலைவாய்ப்புகளும் பகிரப்படவேண்டும் என்ற கோரிக்கையுடனேயே கிழக்கு மாகாணசபையின் ஆட்சி அதிகாரத்தில் இணைந்துகொண்டோம். அதன் அடிப்படையிலேயே ஆட்சி நடைபெற்றுவருகின்றது” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .