2025 மே 15, வியாழக்கிழமை

‘வியாழேந்திரனின் திடீர் தீர்மானம் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது’

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2018 நவம்பர் 05 , பி.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரனின் திடீர் அரசியல் தீர்மானம், தம்மையும் தமிழ் மக்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளதாக, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) நிர்வாகச் செயலாளர் ம.பத்மநாதன் தெரிவித்துள்ளார்.

அவர் இது தொடர்பாக வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“அண்மைய நாட்களாக வெளிநாடுகளுக்கு விஐயம் மேற்கொண்டு வெள்ளிக்கிழமை தாயகம் திரும்பும் வரை, கட்சியின் தலைமையுடன் தொடர்புகளைக் கொண்டிருந்த வியாழேந்திரன், நாடு திரும்பிய பின்னர் மேற்கொண்டுவரும் அரசியல் நடவடிக்கைகள் புரிந்துகொள்ள முடியாதுள்ளது.

“கட்சியின் சார்பில் அவருடன் தொடர்புகொள்ள தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் எவையும் பயனளித்திருக்கவில்லை. இந்த விடயங்கள் யாவும் ஏற்கெனவே திட்டமிடப்பட்டு, அதன் தொடராகவே நடந்தேறியவை என்பதை எம்மால் நம்பமுடியாமல் உள்ளது.

“அண்மைய நாள்களில் அவரின் செவ்விகள், கலந்துரையாடல்களை அவதானித்தோருக்கும் அவரது இந்தத் தீர்மானம் மிகுந்த அதிர்ச்சியையே கொடுத்திருக்கும்.

“நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன், எமது கட்சியின் சார்பில் நாடாளுமன்றத்துக்குத் தெரிவுசெய்யப்பட்ட போதிலும் கூட, அவரது மக்கள் நலன் சார்ந்த செயற்பாடுகள் எவற்றிலும் கட்சி இற்றைவரையிலும் தலையீடுகளை மேற்கொண்டிருந்ததில்லை. மாறாக அவரை உற்சாகப்படுத்தியும் பூரண சுதந்திரம் வழங்கியுமே வந்திருக்கின்றது.

“எமது கட்சியின் தலைவர் த.சித்தார்த்தன், வியாழேந்திரன் மீது கொண்டிருந்த அதீத நம்பிக்கைக்கு இழைத்த துரோகமாகவே அவரது இன்றைய நடவடிக்கைகளை நாம் காண்கின்றோம்.

“கட்சியின் கட்டுக்கோப்பையும் தீர்மானத்தையும் மீறியதுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்கு முரணான வகையில் செயற்பட்டிருக்கும் வியாழேந்திரன் மீது விரைவில் கட்சியின் மத்திய குழுவினூடாக ஒழுக்காற்று நடவடிக்கையெடுத்து, அந்த தீர்மானத்தை, தமிழரசுக் கட்சியின் மேலதிக நடவடிக்கைகளுக்காக சமர்ப்பிக்கவுள்ளோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .