2025 மே 13, செவ்வாய்க்கிழமை

‘வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வெளியேறி விட்டனர்’

Editorial   / 2019 பெப்ரவரி 25 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன், ஏ.எச்.ஏ. ஹுஸைன், ரீ.எல்.ஜவ்பர்கான், வா.கிருஸ்ணா

நாட்டின் ஜனநாயகத்துக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் காரணமாக, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பலர், நாட்டை விட்டு வெளியேறி விட்டனரென, தபால் மற்றும் முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் அமைச்சர் ஏ.எச்.எம்.ஹலீம் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணப் பிரதி அஞ்சல் மா அதிபர் நிர்வாகக் கட்டடத் தொகுதிக்கான அங்குரார்ப்பண நிகழ்வு, மட்டக்களப்பில் நேற்று முன்தினம் (23) நடைபெற்ற போது, அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், இரண்டு, மூன்று மாதங்களுக்கு முன்னர், நாட்டில் ஜனநாயகத்துக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் காரணமாக, அரசாங்கம் சரியான முறையில் இயங்காமல் இருந்ததாகத் தெரிவித்தார்.

இவ்வாறு எமது நாடு ஒரு ஸ்திரமற்ற நாடாக அமைந்தன் காரணமாகவே, பல வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நாட்டை விட்டு வெளியே சென்று விட்டனர் எனவும் அவர் தெரிவித்தார்.

எனினும், நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்காக, அரசாங்கம் என்ற வகையில், பொறுப்புடன் செயலாற்றிக் கொண்டிருக்கின்றோம் எனத் தெரிவித்த அவர், இந்நிலையில்தான் தபாலகங்களைப் புனரமைக்க, அமைச்சரவையின் அங்கிகாரத்துடன், பிரதமர் தமக்கு நிதிகளை வழங்கியுள்ளார் என்றார்.

கிழக்கு மாகாணத்தில் 56 தபாலகங்களும் 222 உப தபாலகங்களும், 4 பிரதேச தபால் அத்தியட்சகர் காரியாலயங்களும் வாடகைக் கட்டடங்களிளேயே இயங்கிக் கொண்டிருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இவற்றைத் தவிர, கிழக்கு மாகாணத்தில் 1,315 தபால் ஊழியர்கள் சேவையில் உள்ளனர் எனவும் இவர்களனைவரது சேவைகளையும் பிரதித் தபால் மா அதிபர் காரியாலயத்தினூடாகவே செயற்படுத்த வேண்டியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இவற்றை சரியான முறையில் நெறிப்படுத்தி, மக்களுக்குச் சிறந்த சேவையை பெற்றுக்கொடுக்கும் முகமாகவே, 350 மில்லியன் ரூபாய் செலவில் 4 மாடிகளைக் கொண்டதாக சகல வசதிகளுடனும் கிழக்கு மாகாண பிராந்திய பிரதித் தபால் மா அதிபர் நிர்வாகக் கட்டடத்தை அமைக்கத் தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் ஹலீம் மேலும் தெரிவித்தார்.

இவ்வைபவத்தில், இராஜாங்க அமைச்சர்களான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, அலிசாஹீர் மௌலானா, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறீநேசன், எஸ்.யோகேஸ்வரன், மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் எம்.உதயகுமார், கிழக்கு மாகாண பிரதி தபால் மா அதிபர் திருமதி ஜெயானந்தி திருச்செல்வம், மட்டக்களப்பு மாநகர மேயர் தியாகராசா சரவணவபவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X