Suganthini Ratnam / 2016 செப்டெம்பர் 22 , மு.ப. 04:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்,பேரின்பராஜா சபேஷ்,எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு, ஏறாவூர் பிரதேசத்தில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்தைக் கண்டித்தும் இச்சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கோரியும் அப்பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தப்பட்டதுடன், அங்கு பூரண கடை அடைப்பும் மேற்கொள்ளப்பட்டது.
ஏறாவூர் பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தில் அங்கத்துவம் வகிக்கும் சுமார் 56 நிறுவனங்களின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஏறாவூர் பிரதேசத்தில் முகாந்திரம் வீதியை அண்டியுள்ள வீட்டில் வசித்துவந்த தாயான நூர்முஹம்மது ஹுஸைராவும் (வயது 56) மற்றும் அவரது திருமணமாகிய மகளான முஹம்மது யூசுப் ஜெஸீரா பாணுவும் கொலை செய்யப்பட்ட நிலையில், கடந்த 11ஆம் திகதி சடலங்களாக மீட்கப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பில் இதுவரையில் 6 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
இப்போராட்டத்தில் கலந்துகொண்ட ஏறாவூர் பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத் தலைவர் ஏ.சி.எம். ஷயீட் தெரிவிக்கையில், 'இக்கொலை தொடர்பான சந்தேக நபர்களில் முக்கிய சூத்திரதாரி கைதுசெய்யப்பட்டுள்ள போதும், பல மறைமுகமான பணப் பரிமாற்றங்கள், அரசியல் அழுத்தங்கள் காரணமாக நீதியான விசாரணையில் தலையீடு ஏற்பட்டு விடுமோ என்று அச்சம்; ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நாங்கள் இப்போராட்டத்தை நடத்துவதற்கு தள்ளப்பட்டுள்ளோம்.
'இச்சம்பவத்தின் சூத்திரதாரி என்று கருதப்படும் சந்தேக நபர் பணப் பரிமாற்றத்தையும் அழுத்தத்தையும் பல்வேறு தரப்புகள் ஊடாகச் செய்துள்ளமை பற்றிப் பரவலாகப் பேசப்படுகின்றது. ஆகவே, இச்சம்பவத்துடன் தொடர்புடைய கொலையாளிகள் தப்பிச் செல்லக்கூடாது என்பதாலும் நீதித்துறையில் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையும் பொய்க்கக்கூடாது என்பதாலும் இது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பொலிஸ் மா அதிபருக்கும் நாம் மகஜரை அனுப்பியுள்ளோம்' என்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவிக்கையில், கொலையாளிகளைத் தப்பவைப்பதற்கு எவர் முயற்சித்தாலும், எதிர்த்து நின்று இறுதிவரைப் போராடுவேன்'; என்றார்.
'குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற உத்தரவு அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது.
குற்றவாளிகள் விடயத்தில் எந்தவிதமான செல்வாக்குகளையோ அல்லது மறைமுகமான சன்மானங்களையோ அதிகாரிகள் பெறுவார்களாக இருந்தால் அவர்களையும் சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு நாங்கள் ஒன்றிணைந்து இறுதி வரைப் போராடுவோம்.
எந்த விதமான பணப்பரிமாற்றஙங்களோ அரசியல் செல்வாக்குகளோ அதிகார அழுத்தங்களோ இன்றி இந்த நாட்டில் சட்டமும் ஒழுங்கும் அமுல்படுத்தப்படுத்தப்பட வேண்டிய தேவையை மக்கள் இப்பொழுது கோரி நிற்கின்றார்கள். அதனையே நாமும் வலியுறுத்துகின்றோம்' என்றார்.
ஏறாவூர் படுகொலை சம்பந்தமாக ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வியாழக்கிழமை மகஜரொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத் தலைவர் ஏ.சி.எம். ஷயீட் தெரிவித்தார்.



8 minute ago
9 minute ago
29 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
9 minute ago
29 minute ago
3 hours ago