2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

'காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு மரணச் சான்றிதழ் வழங்குவது சாத்தியமானதாகக் கருதவில்லை'

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 12 , மு.ப. 08:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

'காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு மரணச் சான்றிதழ் வழங்குவது சாத்தியமான விடயமாக நாங்கள் கருதவில்லை என்பதுடன், தற்போது புனர்வாழ்வு அளிக்கப்பட்ட போராளிகள் இறந்து வருவதாகவும் அறிய முடிகின்றது. எனவே, குறித்த விடயத்தில் அரசாங்கம் கூடிய கரிசினை காட்டி  தீர்வைப் பெற்றுத்தரக்கூடிய வகையில் விசாரணையை நடத்த வேண்டும்' என சமூக நலன்புரி அமைப்பின் தலைவர் சா.திருநாவுக்கரசு தெரிவித்தார்.

நல்லிணக்கப் பொறிமுறைக்கான பொதுமக்களிடம் கருத்தறியும் அமர்வு, இன்று வெள்ளிக்கிழமை மண்முனை தென்னெருவில்பற்று பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு மரணச் சான்றிதழ் வழங்குவது சாத்தியமான விடயமாக நாங்கள் கருதவில்லை. மாறாக, இதற்காக சிறுதொகைப் பணத்தையும் வழங்குகின்றனர். இதனை மேற்கொள்ளும் அரசாங்கம் இவர்களுக்கான தீர்வை எவ்வாறு பெற்றுத்தரப் போகின்றது என்ற அச்சம் மக்கள் மத்தியல் இருக்கின்றது. இதனை மாற்றியமைக்க வேண்டும்.

ஒருவர் குடும்பத்தில் ஒருவர் இழந்திருந்தால், அங்கு அவர்களுக்கு வழங்கப்படும் 25 ஆயிரம் ரூபாய் போதுமானதா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இதனை வைத்து அந்தக் குடும்பத்துக்கு ஏற்பட்ட இழப்புக்களை சமாளித்துக்கொள்ள முடியுமா? என்பது சம்பந்தமாக அரசாங்கம் கருத்தில் கொண்டு இதற்கான பரிகாரங்களை மேற்கொள்ள வேண்டும். இதற்கான மாற்றுவழி என்ன என்பதை அரசாங்கம் முன்வைக்க வேண்டும்.

விடுதலைப்புலிகளில் இருந்துவந்த பலர் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு தொழிலின்றி வாடுகின்றனர். தற்போது புனர்வாழ்வு அளிக்கப்பட்ட போராளிகள் இறந்து வருவதாகவும் அறியமுடிகின்றது. இவற்றுக்கெல்லாம் தீர்வு காணக்கூடிய பொறிமுறை அரசாங்கத்தால் உருவாக்கப்பட வேண்டும்' என தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X