Suganthini Ratnam / 2016 ஓகஸ்ட் 10 , மு.ப. 03:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
காணாமல் போனவர்கள் பற்றிய விவகாரங்களை கையாள்வதற்காக அமையவுள்ள செயலகத்தின் அலுவலகங்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் அமைய வேண்டுமென்ற ஆலோசனை, அரசங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ள நல்லிணக்க பொறிமுறைகளுக்கான ஆலோசசணைக் குழுவிடம் முன்வைக்கப்பட்டுள்ளது.
இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்படவுள்ள நல்லிணக்கப் பொறிமுறைக்கு பொதுமக்களிடம் கருத்தறியும் அமர்வு, வாழைச்சேனை பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதன்போது, சாட்சியமளித்த காணாமல் போனவர்களின் உறவுகள் இந்தக் கோரிக்கையை முன்வைத்தனர்.
மட்டக்களப்பு, மயிலம்பாவெளிப் பிரதேசத்தைச் சேர்ந்த செல்லையா திலகவதி (வயது 42) இங்கு சாட்சியமளிக்கையில், 'காணாமல் போனவர்கள் பற்றிய விவகாரங்களுக்கான செயலகம், இந்த ஆண்டுக்குள் காணாமல் போனவர்கள் பற்றிய உறுதியான தகவல்களை வெளிப்படுத்த வேண்டும். அதேவேளை, அந்த அலுவலகம் நிர்க்கதியானோருக்கு இலகுவை ஏற்படுத்துவதற்காக மாவட்டங்கள் தோறும் அமைய வேண்டும்' என்றார்.
'கொடிய யுத்தத்தின் விளைவாக நான் எனது மூன்று ஆண் சகோதரர்களை இழந்ததுடன், தற்சமயம் பெற்றோரும் இயற்கை எய்திவிட்டதால் அநாதையாகியுள்ளேன். எனக்கு வசிக்க ஒரு வீடு கூட இல்லை. சமுர்த்தி உதவிக் கொடுப்பனவும் இல்லை. அரசாங்கத்தால் எனக்கு எந்த உதவிகளும் இல்லை. தற்சமயம் பனையோலைக் கைத்தொழில் எனது நாளாந்த ஜீவனோபாயத்துக்கு கைகொடுத்துள்ளது.
எங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பாக உள்நாட்டு விசாரணையை விட, சர்வதேச பொறிமுறை ஊடான விசாரணையையே நாங்கள் எதிர்பார்த்துள்ளோம்.
யுத்தத்தால் நாங்கள் தன்மானத்தையும் இழந்து, ஒட்டுமொத்தத்தில் வாழ்வதற்கான நம்பிக்கையையும் முழுமையாக இழந்து தவிக்கின்றோம். வாழ்வா, சாவா என்ற விரக்தி நிலையில் பனை மரமே எனக்கு வாழ்வாதாரமளிக்கின்றது.
யுத்தத்தால் பாதிப்புக்குள்ளான இராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு உதவிகளை அரசாங்கம் வழங்குவது போன்று, யுத்தம் காரணமாக காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கும் தேவைகளை அறிந்து அரசாங்கம் உதவ முன்வர வேண்டும்.
எங்களின் பிரச்சினைகளை கடந்த காலங்களில் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட பல குழுக்களிடம் முன்வைத்து ஏமாற்றம் அடைந்தோம். இந்த நல்லாட்சி எங்களை ஏமாற்றாது என்ற ஒரு துளி நம்பிக்கை உள்ளது' என்றார்.

10 minute ago
25 minute ago
28 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
25 minute ago
28 minute ago
43 minute ago