2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

'கொலைக் குற்றவாளிகளின் வலைப்பின்னலை மேலும் ஆராய வேண்டியிருக்கின்றது'

Suganthini Ratnam   / 2016 செப்டெம்பர் 23 , மு.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்,பேரின்பராஜா சபேஷ்

தாயையும் மகளையும் படுகொலை செய்த குற்றவாளிகளின் வலைப்பின்னலை மேலும் ஆராய வேண்டியிருக்கின்றது. விஞ்ஞான ரீதியான ஆதாரங்களையும் சமர்ப்பித்து கொலைக்குற்றவாளிகளுக்கு அதி உயர்ந்தபட்ச தண்டனை வழங்கப்படும் என மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தினேஸ் கருணாநாயக்க தெரிவித்தார்.

ஏறாவூரில் இடம்பெற்ற தாய், மகள் ஆகிய இருவரினதும் இரட்டைப் படுகொலைக்கு நீதி கோரி வியாழக்கிழமை ஏறாவூர் நகரில் நடத்தப்பட்ட மனித சங்கிலிப் போராட்டத்தில் மக்கள் முன் பிரசன்னமான அவர் ஏறாவூரில் இரட்டைப் படுகொலை நிகழ்வு இடம்பெற்றதன் பின்னர் பொலிஸ் தரப்பில் குற்றவாளிகளைப் பிடிக்க எடுக்கப்பட்டுவந்த பொலிஸாரின் பிரயத்தனங்கள் தொடர்பாகவும் பொதுமக்களுக்கு சந்தேகங்களைத் தெளிவுபடுத்தும் விதமாகவும் உரையாற்றினார்.
மனித சங்கிலிப் போராட்டத்தில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான மக்கள் கவன ஈர்ப்பின் இறுதியில் ஏறாவூர் ஜாமியுல் அக்பர் ஜும்மாப் பள்ளிவாயலில் ஒன்று கூடினர்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தினேஸ் கருணாநாயக்க, 'சம்பவம் நடைபெற்று அது பற்றிப் பொலிஸார் அறிந்து கொண்ட கணப்பொழுதிலிருந்து மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 12 பொலிஸ் நிலையங்களிலிருந்தும் விசேட பொலிஸ் அணிகள் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் பணிப்பின்; பேரில் இரவு பகலாக தங்களை கடமையில்  ஈடுபடுத்திக்கொண்டு துரிதமாகச் செயற்பட்டு சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளார்கள்.

இதுவரை இந்த வாரத்தின் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை வரை மொத்தமாக ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொலை, கொள்ளை, கற்பழிப்பு மற்றும் இதர குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்ட சூத்திரதாரிகளை விசாரணை செய்து மேலும்  அவர்களுக்குள்ள குற்றச்செயல் வலைப்பின்னலை அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. அத்துடன் பிரதான சூத்திரதாரியோடு சம்பந்தப்பட்ட பல்வேறு விசாரணைகளை நாங்கள் பல்வேறு கோணங்களில் மேற்கொண்டு வருகின்றோம்.

அந்த விசாரணைகள் ஏறாவூரில் இடம்பெற்ற இரட்டைப் படுகொலைக்கும் அப்பாற்பட்டதாக இருக்கும்.
திருடப்பட்ட நகைகள், வீட்டில் கைப்பற்றப்பட்ட தடயப் பொருட்கள், படுகொலை செய்யப்பட்ட பெண்களின் உடற்கூற்றுப் பரிசோதனை, இரத்த மாதிரிகள். மரபணுப் பரிசோதனைகள் என்பனவற்றையும் ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளோம்.
குற்றச் செயல்களை ஒழிப்பதிலும் குற்றவாளிகளை கண்டு பிடித்துத் தண்டனை பெற்றுக் கொடுப்பதிலும் பொதுமக்களின் பங்களிப்பு இன்றியமையாததாக இருக்க வேண்டும்.' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X