2025 மே 13, செவ்வாய்க்கிழமை

'கிழக்கு மாகாணத்தில் முன்பள்ளி ஆசிரியர்கள் 3,494 பேருக்கு கொடுப்பனவில்லை'

Suganthini Ratnam   / 2016 மார்ச் 06 , மு.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

கிழக்கு மாகாணத்திலுள்ள முன்பள்ளி ஆசிரியர்கள் 4,065 பேரில் 571 பேர் மாத்திரமே கொடுப்பனவு பெறுகின்றனர். ஏனைய 3,494 பேரும் எந்தவிதக் கொடுப்பனவுமின்றிக் கடமையாற்றுவதாக அம்மாகாணப் பாலர் பாடசாலைப் பணியகத்தின் தவிசாளர் பொன்.செல்வநாயகம் தெரிவித்தார்.

கொடுப்பனவின்றிக் கடமையாற்றுகின்ற முன்பள்ளி ஆசிரியர்களுக்கு கொடுப்பனவைப் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள முன்பள்ளி ஆசிரியர்களுக்கான டிப்ளோமா பாடநெறி,  முதன்முறையாக மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலையில் சனிக்கிழமை (05) ஆரம்பிக்கப்பட்டபோதே, அவர் இதனைக் கூறினார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'கிழக்கு மாகாண கல்வியமைச்சும் கிழக்கு மாகாணப் பாலர் பாடசாலை பணியகமும் இணைந்து ஆசிரியர்களை மேம்படுத்தும் ஆண்டாக இந்த ஆண்டைப்  பிரகடனப்படுத்தியுள்ளது. அதன் முதலாவது கட்டமே டிப்ளோமா பாடநெறி ஆரம்பிக்கப்படும் விடயமாகும்.

இந்த ஆண்டில் முன்பள்ளி ஆசிரியர்கள் 1,000 பேரை டிப்ளோமா பாடநெறியை மேற்கொள்ளும் திட்டத்தை உருவாக்கியுள்ளோம். டிப்ளோமா பாடநெறியை மேற்கொள்ளும்போதே, முன்பள்ளி ஆசிரியர்கள் பூரணத்துவமிக்கவர்களாகக் கருதப்படுவர்' என்றார்.

'கிழக்கு மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட 1,832 முன்பள்ளிகள் இயங்குகின்றன. இம்முன்பள்ளிகளின்  ஆசிரியர்கள் கல்வித்தகைமை உடையவர்களா என்பது கேள்விக்குறியாக உள்ளது. க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையில் சித்தி அடையாதவர்களும் முன்பள்ளிகளில்; கடமையாற்றுகின்றனர். பல ஆண்டுகாலமாக சேவையில் ஈடுபட்டுள்ள அவர்களையும் வளப்படுத்துவதற்கு திட்டம் வகுத்துள்ளோம்' ' எனவும் அவர் கூறினார்.  

'மேலும், இம்மாகாணத்தில் 1,600 ஆசிரியர்கள் டிப்ளோமா தரத்தைப் பெற வேண்டியுள்ளது. கல்வியுடன் தொடர்புடைய அனைத்து விடயங்களையும் முன்பள்ளி ஆசிரியர்கள் பெற வேண்டுமென்பதற்காக அவர்களின் செயற்பாட்டை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை இந்த ஆண்டில் மேற்கொண்டு வருகிறோம். அத்துடன், முன்பள்ளி ஆசிரியர்கள் மகிழ்ச்சியடையும் ஆண்டைப் பிரகடனப்படுத்துவதற்கும் முயற்சிக்கிறோம்.

20 வருடங்களுக்கு முன்னர் நினைத்தவாறு முன்பள்ளிகளை அமைத்து வந்தோம். ஆனால், தற்போது அவ்வாறு அமைக்க முடியாது. கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சரின் பணிப்புக்கமைய முன்பள்ளிக்கான பதிவு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. முன்பள்ளிகளை ஒழுங்குபடுத்துவதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' எனவும் அவர் மேலும் கூறினார்.

கிழக்கு மாகாணத்திலுள்ள முன்பள்ளி ஆசிரியர்களும் தங்களை தகுதி உடையவர்களாக மாற்ற வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X