2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

'சதித்திட்டங்களால் நல்லாட்சி அரசாங்கத்தை தோற்கடிக்க முடியாது'

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 04 , மு.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

எந்தவொரு சதித்திட்டங்களாலும் இந்த நல்லாட்சி அரசாங்கத்தை தோற்கடிக்க முடியாது என கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, காத்தான்குடிப் பிரதேசத்தில் நேற்றுப் புதன்கிழமை ஒரு கோடியே 80 இலட்சம் ரூபாய் நிதியில் அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்துவைத்து உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'நல்லாட்சியை ஏற்படுத்தியதன் விளைவாக உண்மையான ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் அனுபவித்துக்கொண்டிருக்கின்றோம்.

அன்று பேச்சு சுதந்திரம் இருக்கவில்லை. இன்று பேச்சு சுதந்திரம் மற்றும் ஊடக சுதந்திரம் இருக்கின்றன. இன்று ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளது.

தமிழ், முஸ்லிம் மக்களை நசுக்கிய அந்த கொடூரமான ஆட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. தமிழர்களை நசுக்கி விட்டோம். முஸ்லிம்களை நசுக்க வேண்டும் என்று புறப்பட்டபோதுதான் அதன் விளைவாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டுள்ளது.

உண்மையான அரசியல் அதிகாரத்தினையும் அரசியல் உரிமைகளையும் மறுபுறம் அபிவிருத்தி திட்டங்களையும் இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் மேற்கொள்வதற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

கிழக்கு மாகாணத்தில் 7500 மில்லியன் ரூபா நிதியினை கல்வித்துறைக்கான அபிவிருத்திக்கு இவ்வாண்டு கொண்டு வந்துள்ளோம்.

இவ்வாறான அபிவிருத்திக்கு வித்திட்டவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்; தலைவர் ரவூப் ஹக்கீமும் ஆவர்.

இந்த நாட்டில் இவ்வாறான ஒரு மாற்றத்தினை கொண்டு வருவதற்காக  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் காரணமாக இருந்தன.

தமிழர்களும் முஸ்லிம்களும் சேர்ந்து மத்தியில் ஆட்சியை மாற்றினார்கள் அதன் பயனாக கிழக்கு மாகாணத்தில் ஒரு உண்மையான நல்லாட்சியை ஏற்படுத்தியுள்ளோம்' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X