2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

'சமத்துவமான நிதிப்பங்கீடு மேற்கொள்ளப்படவில்லை'

Suganthini Ratnam   / 2016 நவம்பர் 14 , மு.ப. 07:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்,வா.கிருஸ்ணா

தற்போது கிழக்கு மாகாணத்தில் சமத்துவமான நிதிப்பங்கீடு மேற்கொள்ளப்படவில்லை எனத் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் தலைவர் கே.நந்தகோபனின் 08ஆவது ஆண்டு நினைவுதினம்,  மட்டக்களப்பில் அமைந்துள்ள அதன் தலைமை அலுவலகத்தில்  திங்கட்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியபோது,'கிழக்கு மாகாணத்தில் தற்போது இனத்துவ சமாந்திரம் பேணப்படவில்லை என்பதுடன், சமத்துவமான நிதிப்பங்கீடும் மேற்கொள்ளப்படவில்லை.

2008ஆம் ஆண்டு தொடக்கம் 2012ஆம் ஆண்டுவரை இம்மாகாணத்தில் முதலமைச்சராக இருந்த சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் இன ஒற்றுமையைக் கட்டிக்காத்தோம். இன சமத்துவம் பேணப்பட்டது. நிதிப்பங்கீடும் சமமாக மேற்கொள்ளப்பட்டது' என்றார்.  

'யுத்தம் காரணமாகப்; பாதிக்கப்பட்ட பெண்களுக்காக கொண்டுவரப்படும் நிதி ஒழுங்கான முறையில் செலவு செய்யப்படுகின்றதா என்று கேட்டால், இல்லை என்பது இங்குள்ள அனைவருக்கும் தெரியும். இந்தப்  பெண்களின் வருமானத்துக்காக வழங்கப்பட்ட நிதியானது உரிய நோக்கத்துக்காக இன்று செலவு செய்யப்படுகின்றதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

கிழக்கு மாகாணத்தில் முதலமைச்சராக சிவநேசதுரை சந்திரகாந்தன் இருந்தபோது, அவரால்; புனரமைக்கப்பட்ட பாதைகளும் பாடசாலைக் கட்டடங்களும் பஸ் தரிப்பு நிலையங்களும் பாலங்களும் அபிவிருத்திகளும் தற்போது காட்சி அளிக்கின்றதே தவிர, வேறெதுவும் இடம்பெறவில்லை.

கிழக்கு மாகாணம் சுபீட்சமாக இருக்கவேண்டும் என்பதற்காக யுத்தம் வேண்டாம், சமாதானம் வேண்டும், ஜனநாயகம் வேண்டும் என்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி முயற்சிகளை முன்னெடுத்தது.
2012ஆம் ஆண்டுக்குப் பின்னர் கிழக்கு மாகாணத்தின் நிலைமை எவ்வாறிருக்கின்றது என்பதை நான் சொல்லாமலே நீங்கள் விளங்கிக்கொள்வீர்கள்.

இவ்வாறான  நிலைமை கிழக்கு மாகாணத்தில் தொடருமாயின், ஓர் இனம் இன்னொரு இனத்தை ஒரு சமூகம் இன்னொரு சமூகத்தை சந்தேகக்கண் கொண்டு இனத்துவ ரீதியாகப் பார்க்கும் நிலைமை  உருவாகலாம் என்ற அச்சம் தோன்றியுள்ளது.
மேலும், இனங்களைத் தூண்டிவிட்டு எவ்வாறு அரசியல் செய்யலாம் என்று சில அரசியல்வாதிகள் நினைக்கின்றனர்.
ஜனநாயகம் மலர வேண்டும், ஜனநாயகக் கதவு திறக்கப்பட வேண்டும் என்பதற்காக பாடுபட்ட முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன்  பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தற்போது  சிறைச்சாலையில் ஒரு வருடத்துக்கும்  மேலாக உள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X