Suganthini Ratnam / 2016 ஓகஸ்ட் 10 , மு.ப. 07:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
'நல்லாட்சிக் காலத்தில் கோழிக்கூட்டுக்குள் வாழ்வதற்கான தெரிவைத் தவிர, எனக்கு வேறு வழி இல்லை' என மயிலம்பாவெளி, விபுலானந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த செபமாலை இராஜேந்திரம் (வயது 59) என்பவர் தெரிவித்தார்.
இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்படவுள்ள நல்லிணக்கப் பொறிமுறைக்கு பொதுமக்களிடம் கருத்தறியும் அமர்வு, வாழைச்சேனை பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் செவ்வாய்க்கிழமை (09) நடைபெற்றது.
இதன்போது அவர் மேலும்; தெரிவிக்கையில், '1991ஆம் ஆண்டு ஜுன் மாதம் 12ஆம் திகதி மாலை 05 மணியளவில் நாம் வீட்டிலிருந்தபோது, படையினர் வந்து எனது கணவரைக் கைதுசெய்தனர். சில மணித்தியாலங்களாக எனது கணவரை விடுவிப்பதற்கு நான் போராடினேன். அது முடியவில்லை. அன்று படையினர் கைதுசெய்து கொண்டுசென்ற எனது கணவர், 25 வருடங்கள் கடந்தபோதிலும், என்ன ஆனார் என்று தெரியவில்லை.
எனது கணவரை படையினர் கைதுசெய்து கொண்டு செல்லும்போது, நான் 06 மாதக் கர்ப்பிணியாக இருந்தேன். ஒரு உதவியும் இல்லாமல் அகதி வாழ்க்கையுடனேயே எனது வாழ்நாள் முடிந்தது' என்றார்.
'கணவனை இழந்த எனக்கு, அவரது மரணப்பதிவும் 20 பேர்ச் வளவும் 25 ஆயிரம் ரூபாய் பணத்தையும் அரசாங்கம் வழங்கியது.
விபுலாநந்தபுரம் கிராமத்தில் எவருக்கும் சமுர்த்திக் கொடுப்பனவு வழங்கப்படவில்லை. காரணம் வளவுத் துண்டுகளை அரசாங்கம் தந்திருப்பதாலேயாகும். எனக்கு வசிப்பதற்கு ஒரு வீடு கூட இல்லை. எனது வாழ்வாதாரத்துக்காக கோழிகள் வளர்த்தேன். நோய் காரணமாக அக்கோழிகளும் இறக்க, கோழிக்கூடாக இருந்த கொட்டிலை நான் வாழும் கொட்டிலாக மாற்றியுள்ளேன். கை, கால் நீட்டி உறங்குவதற்கு எனக்கு ஒரு இடம் வேண்டும். புதிதாக குடிசை அமைக்க என்னிடம் வசதி இல்லை.
எனது கணவன் உயிருடன் இருந்திருந்தால், நான் கோழிக்கூட்டைப் வீடாகப்; பயன்படுத்தி அதில் வாழவேண்டி வந்திருக்காது' என்றார்.
'மேலும், காணாமல் போனோரை விசாரணை செய்யும் அலுவலகம் அமைக்கப்படும்போது, அதில் உள்ளூர் நிலவரங்களை நன்கு அறிந்த என்னைப்போல நன்கு பாதிக்கப்பட்டவர்கள் பணியில் இருக்க வேண்டும். உள்ளூர் நிலைமைகள், பாதிக்கப்பட்ட அனுபவங்கள், மொழிவழக்கு, பூகோள அமைவிடம் உள்ளிட்ட எதுவும் தெரியாதவர்களை பணிக்கு அமர்த்தினால் காணாமல் போனோர் பற்றிய விசாரணையும் சிறிது காலத்தில் காணாமலே போய்விடும்' எனவும் அவர் கூறினார்.

9 minute ago
24 minute ago
27 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
24 minute ago
27 minute ago
42 minute ago