2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

'பயங்கரவாதத்துடன் எமது சமூகத்தில் உள்ளவர்களுக்குத் தொடர்புள்ளதாக கூறியமை புண்படுத்தியுள்ளது'

Suganthini Ratnam   / 2016 நவம்பர் 27 , மு.ப. 08:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

'எமது முஸ்லிம் சமுதாயமானது அனைத்துச் சமூகங்களுடன் சமாதானத்துடன் சக வாழ்வுடனும் வாழ்கின்ற இச்சூழ்நிலையில், சர்வதேச ரீதியாக உள்ள ஒரு பயங்கரவாத இயக்கத்துடன் எமது சமூகத்தில் உள்ளவர்களுக்குத் தொடர்புள்ளதாக நீதியமைச்சர் கூறியமை எங்களின் மனதைப்  புண்படுத்தியுள்ளது' என  அலிஸாஹிர் மௌலானா எம்.பி. தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள  அறிக்கையில் 'சர்வதேச பயங்கரவாத இயக்கத்தோடு இலங்கை முஸ்லிம்களை நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தொடர்புபடுத்தியது கண்டிக்கத்தக்கது. நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷவின் சமீபத்திய முஸ்லிம்கள் பற்றிய கூற்றுத் தொடர்பில் ஒரு முக்கியமான விடயத்தை இந்த நாட்டுக்குக் கூறி வைக்க விளைகின்றேன்.
நான் இந்த நாட்டின் உயரிய சபையான நாடாளுமன்றத்திலும் கடந்த திங்களன்று (21.11.2016) இது பற்றிய கண்டத்தை வெளியிட்டுள்ளேன்.
நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ கடந்த வெள்ளியன்று நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின்போது தனது உரையில் எங்களது மனதைப் புண்படுத்தும் வகையில் சில விடயங்களைக் குறிப்பிட்டிருந்தார்.
எமது முஸ்லிம் சமுதாயமானது அனைத்துச் சமூகங்களுடன் சமாதானத்துடன் சக வாழ்வுடனும் வாழ்கின்ற இச்சூழ்நிலையில், சர்வதேச ரீதியாக உள்ள ஒரு பயங்கரவாத இயக்கத்துடன் எமது சமூகத்தில் உள்ளவர்களுக்குத் தொடர்புள்ளதாக நீதியமைச்சர் கூறியமை எங்களின் மனதைப்  புண்படுத்தியுள்ளது.
காரணம் என்னவென்றால், இலங்கையிலுள்ள ஜம்மியத்துல் உலமா, தௌஹீத் ஜமாஅத், தப்லீக் ஜமாஅத், சுன்னத் வல் ஜமாஅத் மற்றும் தரீக்காக்களான அலவியத்துல் காதிரிய்யா, சாதுலியா போன்ற, எங்கள் மார்க்கம் சம்பந்தப்பட்ட அமைப்புக்களில் உள்ளோர், நல்ல முறையிலே எமது சமூகத்தை வழி நடத்திக் கொண்டிருக்கின்றார்கள்.
அவர்கள் ஒருபோதும் வன்முறைகளைத் தூண்டுபவர்களாக இருப்பதில்லை என்பது இந்த நாட்டிலேயுள்ள அனைவருக்கும் தெரியும்.
இப்படியான சூழ்நிலையிலே நிதியமைச்சர் இந்த நாட்டின் உயரிய சபையான நாடாளுமன்றத்திலே ஆற்றிய உரை இப்போது நாட்டில் இன முறுகல்களை ஏற்படுத்த முனைகின்ற விஷமிகளுக்குத் தீனி போடுவது போன்று அமைந்திருப்பதையிட்டு, அதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம்' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X