2025 மே 13, செவ்வாய்க்கிழமை

'6 மாதங்களுக்குள் அகதிகள் மீள்குடியேற்றப்பட வேண்டுமென பணிப்பு'

Suganthini Ratnam   / 2016 மார்ச் 13 , மு.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

இந்த நாட்டில் அகதிகள் என்ற பெயரில் எவரும் இருக்கக்கூடாது என்பதுடன், ஆறு மாதங்களுக்குள் ஏதோவொரு வகையில் உள்நாட்டிலுள்ள அத்தனை அகதிகளும் மீள்குடியமர்த்தப்பட வேண்டும் என்று தங்களுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளதாக மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு புனரமைப்பு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.  

இதற்குத் தேவையான நிதியை எமது அமைச்சுக்கு ஒதுக்கீடு செய்துள்ளதுடன், மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் இது தொடர்பில் தாம் செயற்படத் தொடங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.

சவூதி அரேபியத் தனவந்தர்களின் நன்கொடையில் பூநொச்சிமுனைக் கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்ட 20 வீடுகளை பயனாளிகளிடம்  கையளிக்கும் நிகழ்வு, சனிக்கிழமை (12) மாலை நடைபெற்றது. இங்கு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கமைய இராணுவ முகாம்கள் தவிர்ந்த ஏனைய அனைத்துக் காணிகளையும் காணிச் சொந்தக்காரர்களுக்கு வழங்கி, அவர்களைச் சொந்த இடங்களில் மீள்குடியமர்த்துவதற்கான சகல பணிகளையும் முன்னெடுக்கின்றோம். இதற்காக விசேட குழுக்களையும்  நியமித்துள்ளோம்.

மேலும், கண்ணிவெடிகள் அகற்றப்படாமல் பல பிரதேசங்கள் உள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்திலும் கண்ணிவெடிகள் அகற்றப்படாமல் பல பிரதேசங்கள் இன்னுமுள்ளன. அப்பிரதேசங்களில்; கண்ணிவெடிகளை அகற்றும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளோம்' என்றார்.

'யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்குமாறு எங்களுக்கு ஜனாதிபதி பணித்துள்ளார். அந்த வகையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில்; யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஒரு இலட்சத்து 30 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்க வேண்டியுள்ளது.

இந்த வீடுகளை நிர்மாணிப்பது தொடர்பில்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமும்  பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமும் எமது அமைச்சு முன்வைத்தது. இந்நிலையில், 65,000 வீடுகளை மூன்று ஆண்டுகளுக்குள் நிர்மாணிப்பதற்குத் தேவையான நிதியை எமது அமைச்சுக்கு ஜனாதிபதியும் பிரதமரும் ஒதுக்கீடு செய்து தந்துள்ளனர்.
இப்போது யாழ்ப்பாணத்தில் இதற்கான  வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளோம். இந்தத் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்திலும் ஒவ்வொரு வருடமும் ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கவுள்ளோம்.  

இதேபோன்று எமது அமைச்சினூடாகவும் உள்நாட்டு நிதியைக் கொண்டும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இந்த ஆண்டு 10 ஆயிரம் வீடுகளை வடக்கு, கிழக்கு மாகாணங்களில்; நிர்மாணிப்பதற்குத் தீர்மானித்துள்ளோம்' எனவும் அவர் கூறினார்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X