2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

சுய உதவி அமைப்புக்களின் 2 ஆம் கட்ட பயிற்சி நெறி ஆரம்பிப்பு

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 26 , மு.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


மாற்றுத் திறனாளிகளுக்கு வாழ்வளிக்க சமூக மட்டத்தில் உருவாக்கப்பட்ட சுய உதவி அமைப்புக்களின் 2 ஆம் கட்ட ஐந்து நாள் உட்களப் பயிற்சிநெறி செவ்வாய்க்கிழமை (26) மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் சர்வோதையப் பயிற்சிப் பாடசாலையில் ஆரம்பமானது.

மாற்றுத் திறனாளிகளுக்கு வாழ்வளிக்க சமூக மட்டத்தில் மாற்றுத் திறனாளிகளையும் கொண்ட சுய உதவி அமைப்புக்கள் உருவாக்கப்பட்டு வருவதாக 'நம்பிக்கை ஏணி நிறுவனத்தின் பணிப்பாளர் எல்.ஆர்.டேவிட் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

'மூன்று வருட திட்டமாக முன்னெடுக்கப்படும் இத்திட்டம் யூ.எஸ்.எயிட் நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் தென்பகுதியில் செயல்படும் 'நவஜீவன' அமைப்புக்கூடாக கிழக்கு மாகாணத்தில் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்த நோக்கத்திற்காக மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட 30 தன்னார்வத் தொண்டர்கள் பயிற்றுவிக்கப்பட்டுள்ளார்கள்.

வலது குறைந்தோருக்காக தென்பகுதியில் பணியாற்றும் 'நவஜீவன' என்ற அமைப்பின் வளவாளர்கள் இந்தத் தொண்டர்களைப் பயிற்றுவித்து வருகின்றார்கள்.

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை வடக்கு மற்றும் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள சகல கிராமங்களிலிருந்தும் மாற்றுத் திறனாளிகள் சுமார் 1250 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கான நலனோம்பு விடயங்களில் எமது தன்னார்வத் தொண்டர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

அடையாளம் காணப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு வைத்திய வசதிகள், தேக ஆரோக்கியப் பயிற்சிகள், பேசும் பயிற்சிகள் என்பனவற்றுடன் செவிமடுக்கும் சாதனங்கள், முச்சக்கர நாற்காலிகள், செயற்கைக் கால்கள் என்பன வழங்கப்படுவதோடு இதனுடன் இணைந்ததாக தொழில் பயிற்சிகளும் வாழ்வாதார உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்தப் பயிற்சிகளில் அங்கவீனர்களான திறனாளிகளும் பங்குபற்றுகின்றார்கள்.

இவர்களைக் கொண்டே கிராம மட்டத்தில் மாற்றுத் திறனாளிகளையும் உள்ளடக்கியதான சுய உதவி அமைப்புக்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

மாவட்ட மட்டத்தில் மாற்றுத் திறனாளிகளின் நலன்களுக்காகச் செய்றபடக் கூடிய மாவட்ட அமைப்பின் மூலமாக மாற்றுத் திறனாளிகளின் தேவைகள் பிரச்சினைகள் என்பன அமைப்பு ரீதியாக வலுவான குரலாக வெளியில் கொண்டு வரப்படும்.

பாடசாலைகளிலும், அரசாங்க காரியாலயங்களிலும் வலது குறைந்தோருக்கான வசதிவாய்ப்புக்களை ஏற்படுத்துவதும் சமவாய்ப்புக்களை ஏற்படுத்துவதும் தமது நோக்கம்' என்று  அவர் மேலும் தெரிவித்தார்.

இப்பயிற்சி நெறிகளை 'நவஜீவன' அமைப்பின் வளவாளர்களான எச்.ஆர்.பிரசன்யா, கீத் குமார, எஸ்.செபுலா, கே.சுனில் ஆகியோருடன் 'நம்பிக்கை; ஏணி' நிறுவனத்தைச் சேர்ந்த எஸ்.கிறிஸ்டினா, ஆர்.பொனயின் ஆகியோர் வழங்கி வருகின்றனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X