2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மட்டக்களப்பில் 4 அபிவிருத்திகளே நிறைவு: எஸ்.முரளீதரன்

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 13 , மு.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

கிராமத்துக்கு ஒரு அபிவிருத்தித்திட்டம் என்ற அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மொத்தமாக 402 அபிவிருத்தித் திட்டங்களுக்கு  அனுமதி அளிக்கப்பட்டன.  ஆனால், இன்றுவரை  04 அபிவிருத்தித் திட்டங்கள் மாத்திரம்  நிறைவேற்றப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.முரளீதரன் தெரிவித்தார்.

ஏறாவூர்ப்பற்றில்  03 அபிவிருத்தித் திட்டங்களும் வாகரை பிரதேச செயலகப் பிரிவில் ஒரு அபிவிருத்தித் திட்டமும் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இது ஒரு பின்தங்கிய நிலைமையாகும். கடந்த மே மாதம் 5ஆம் திகதி இந்த அபிவிருத்தித் திட்டங்களுக்கான அனுமதி அளிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் இனங்காணப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களை செயற்படுத்துதல் தொடர்பான  மீளாய்வுக் கூட்டம் நகர பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை (12) நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

'இனங்காணப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களை செயற்படுத்துதல் சம்பந்தமான அனைத்து மீளாய்வுக் கூட்டங்களையும் கடந்த  மே மாதத்தினுள் நடத்தி முடிக்குமாறு அமைச்சு உத்தரவிட்டிருந்தது.

 மீளாய்வுக் கூட்டங்களை நாங்கள் நடத்துவதற்கு முக்கியமாக 02 காரணங்கள் உள்ளன. செயற்றிட்டங்களை சரியாகச் செய்ய வேண்டும் என்பது ஒன்று. செயற்றிட்டங்களை வரையறுக்கப்பட்ட காலத்தினுள் முடிக்க வேண்டும் என்பது மற்றொன்று. இந்த 02  பிரதான நோக்கங்களின் அடிப்படையில் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டங்கள் கூட்டப்படுகின்றன.

செயற்றிட்டங்கள் யாவும் அரைகுறையாக விடப்படாமல் இந்த ஆண்டு இறுதிக்குள் பூரணமாக முடிவுறுத்தப்பட வேண்டும் என்று அமைச்சு மிகவும் கண்டிப்பாக அறிவுறுத்தியுள்ளது. அவ்வாறு இடம்பெறாவிட்டால் அடுத்த ஆண்டு அபிவிருத்திக்கான நிதியை  நாம் பெறமுடியாத சூழ்நிலை ஏற்படும்.

மாரிகாலம் அடை மழை பெய்ய ஆரம்பித்தால் எதுவித அபிவிருத்தித் திட்டங்களையும் செய்யமுடியாது. எனவே, அதற்கிடையில் விரைவாக அபிவிருத்தித் திட்டங்களை நிறைவு செய்ய வேண்டும்.

கடந்த காலங்களில் செயற்றிட்டங்களை உரிய வேளைக்குள் செய்து முடித்த மாவட்டம் என்கின்ற பாராட்டை அமைச்சிடமிருந்து மட்டக்களப்பு மாவட்டம் பெற்றுள்ளது.

பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் அனுமதிக்கப்படுகின்ற அபிவிருத்தித் திட்டங்கள் முழுவதும் அரசியல் கண்காணிப்பில் முன்னெடுக்கப்படுகின்றன.

அரசியல்வாதிகளுக்கும் மக்களுக்கும் இடையிலான வேண்டுகோள்களின் அடிப்படையில், அரசியல்வாதிகள் தங்களது செயற்றிட்டங்களை அடிக்கடி மாற்றிக்கொண்டிருப்பார்கள்.  அதிகாரிகளும் இதை மறுக்கமுடியாமல் திண்டாட்டத்துடன் அமுல்படுத்த வேண்டியுள்ளது.
இவ்வாறு டிசெம்பர் 31ஆம் திகதிவரையும் செயற்றிட்டங்களை மாற்றிக்கொண்டேயிருக்க வேண்டியிருப்பதால், உரிய காலத்தில் இந்தத் திட்டங்களை பூர்த்தி செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது.

அதிகாரிகள் உரிய காலத்தினுள் திட்டங்களை நிறைவேற்றுவார்களாக இருந்தால் அரசியல்வாதிகள் திடீர், திடீரென திட்டங்களை மாற்றும் சிக்கலிலிருந்து  விடுவித்துக்கொள்ளலாம்.

கையேட்டிலுள்ள உரிய வழிகாட்டல்களை பின்பற்றி தராதரங்களின் அடிப்படையில் செயற்றிட்டங்கள் உரிய காலத்தினுள் நிறைவேற்றப்பட்டால் மட்டக்களப்பு மாவட்டம் துரித அபிவிருத்தி காண்பதுடன்,  எதிர்வரும் காலங்களிலும் அபிவிருத்திகளுக்காக அதிகளவு நிதியை இந்த மாவட்டம் பெற்றுக்கொள்ளும். இதற்கு அதிகாரிகள் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X