2025 மே 01, வியாழக்கிழமை

மட்டக்களப்பிற்கு 800 வீடுகள் 2000 மலசலக்கூடங்கள் அமைக்க நடவடிக்கை

Kogilavani   / 2014 ஜனவரி 11 , மு.ப. 08:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல்-சக்திவேல், தேவ அச்சுதன்

'மீள்குடியேற்ற அமைச்சினூடாக 800 வீடுகளும் 2000 மலசலக்கூடங்களும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அமைத்துகொடுக்கப்படவுள்ளது. அதேவேளை இந்திய அரசாங்கத்தின் இரண்டாம் கட்ட வீட்டுத் திட்டமும் முன்னெடுக்கப்படவுள்ளது. ஜனாதிபதியுடன் நான் நேரடியாக கதைத்து, வடமாகாகணத்திற்கு வந்த 50 ஆயிரம் வீட்டுத் திட்டத்தில்தான் 5000 வீட்டினை மட்டக்களப்பிற்கு பெற்றகொடுத்துள்ளேன்' என்று மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கூட்டமொன்றில் தெரிவித்துள்ளார்.

'சர்வதேச அரசியலை தீர்மானிக்கின்ற சக்தி நாங்களில்லை. ஆனால் சர்வதேச உதவிகளைப் பெற்றுத்தான் நாங்கள் அபிவிருத்திகளை மேற்கொள்கின்றோம். இது விளங்காத தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இன்று அறிக்கைகள் விடுகின்றனர்' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு- போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் மேற்கொள்ளப்பட்டுவரும் இந்திய வீடமைப்புத் திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பாக ஆராயும் கூட்டத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'5000 வீடுகளில் வெல்லாவெளி பிரதேசத்திற்கு  450 வீடுகள், பட்டிப்பளை பிரதேசத்திற்கு 1000 விடுகள், வவுணதீவுப் பிரதேசத்திற்கு 350 வீடுகள் என இம்மாவட்டத்தில் யுத்தத்தினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட 6 பிரதேசங்களுக்கு இந்த வீட்டுத் திட்டத்தினைப் பிரித்துக் கொடுத்துள்ளோம். பாதிக்கப்பட்டு வீடுகள் கிடைக்கப் பெறாதவர்களுக்கும் விரைவில் வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படும்.

மட்டக்களப்பு மாவட்டம்; கடந்த 5 வருடங்களுக்கு முன்பு இருந்ததனை விட தற்போது பாரிய மாற்றத்தினை எதிர்கொண்டுள்ளது. மின்சாரத்தேவை பொரும்பாலும் பூர்த்தியாக்கப் பட்டுள்ளது. வீட்டுத் திட்டங்கள் அமுல்ப்படுத்தப்பட்டுக் கொண்டு வருகின்றன, வீதி அபிவிருத்திகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன , பாலங்கள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு பல அபிவிருத்திகள் இந்தமாவட்டத்தில் நடைபெற்றுக் கொண்டு வருகின்றன' என்றார்.

இதேவேளை, 'இவற்றுக்கெல்லாம் மக்கள் நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும். நாங்கள் அரசாங்கத்தின் பக்கம் இருப்பதனால்தான்; அங்குள்ள வளங்களைக் கொண்டுஇங்கு அபிவிருத்திகளை மேற்கொள்கின்றோம். இவைகளை எதிர்க்கட்சி வரிசையில் இருந்துகொண்டு மேற்கொள்ள முடியாது' என்றும் அவர் தெரிவித்தார்.

2014 தேர்தல் ஆண்டு

'இந்த 2014 ஆம் ஆண்டு ஒரு தேர்தல் ஆண்டாகும். எதிர்வருகின்ற தேர்தலை மக்களாகிய நீங்கள் சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டும்.

ஆனாலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் 8000 பேர் வீடு இல்லாமல் இருக்கின்றார்கள். வீடமைப்பை அதிகரிக்க வேண்டியுள்ளது, வீதி அபிவிருத்திகளை மேலும் விரிவுபடுத்த வேண்டியுள்ளது. குடிநீர் திட்டத்தினை பரவலாக்க வேண்டியுள்ளது. இவற்றுக்கெல்லாம் எதிர்வருகின்ற தேர்தலை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

கடந்த யுத்த காலத்தில்பட்ட துன்ப, துயரங்கள் தற்போது மக்களிடத்தில் இல்லை. கருணா அம்மான் அப்போது எடுத்த முடிவு சரி என்பதனை மக்கள் இப்போதான் உணரத்  தொடங்கியுள்ளார்கள்.

இவ்வருடம் பிரதேச சபைத் தேர்தல் வருவதற்கு வாய்ப்பிருக்கின்றது. அதேப்போல் மேல்மாகாணம், தென்மாகாணத்திலும் தேர்தல் நடைபெறப்போகின்றது. ஜனாதிபதித் தேர்தல் வருவதற்கும் வாய்ப்பிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தல் வந்தால் மீண்டும் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் வெற்றியீட்டப் போகின்றார். இதற்கு மாற்றுக் கருத்துக்கே இடமில்லை. இன்னும் 20 வருடங்களுக்கு தொடர்ச்சியாக இந்த அரசாங்கம் ஆட்சியிலிருக்கும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில்  21 மாணவர்கள் வைத்தியர்களாவதற்று பல்கலைகக் கழகங்களுககுத் தெரிவு செய்யப் பட்டுள்ளார்கள். இது சரித்திரத்தில் நடக்காத ஒன்று இன்றய நிலையில் யுத்தம் நடைபெற்றிருந்தால் இது நடைபெற்றிருக்காது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருதிக்கு இந்த அரசாங்கம் அதிகளவு நிதிகளை ஒதுக்கிக் கொண்டே இருக்கின்றது. எதிர்வரும் காலங்களில் மேலும் அதிகளவு குளங்களைப் புணரமைப்புச் செய்யவும் வெள்ளத்தினைத் தடுப்பதற்கு அணைக்கட்டுகளைக் கட்டவும் விவசாயத்தினைப் பெருக்கவும் தீர்மானித்துள்ளோம்.

கிழக்கு மாகாண சபையில் தமிழ் அமைச்சர் இல்லை

'கடந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் நான் ஒவ்வவொரு கிராமம் கிராமமாகச் சென்று புத்தி சொன்னேன். ஆனால் அதனை மக்கள் கேட்கவில்லை. அதனைக் கேட்காத காரணத்தினால்தான் இன்று ஒரு தமிழ் அமைச்சர் கூட கிழக்கு மாகணசபையில் இல்லை.

கிழக்கு மாகாணத்தில் மத்திய அரசில் நான் மட்டும்தான் அமைச்சராக இருக்கின்றேன். நானும் இல்லை என்றால் இந்த அபிவிருத்திகளை உங்களுக்கு கொண்டு வருவது யார்? ஒருவருமில்லை. இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உபதலைவராகவும் நான் இருக்கின்றேன். அதனால் அதிகளவு அபிவிருத்திகளை இங்கு கொண்டு வரமுடிகின்றது.

வடக்கில் அபிவிருத்து நடைபெறாது


'தேர்தலில்  வடமாகாண சபையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியது. ஆனால் ஒரு அபிவிருத்தியுமே நடைபெறாது. ஏனெனில் எப்போது ஆட்சி அமைத்தார்களோ அன்றிலிருதே சண்டை பிடிக்க தொடங்கி விட்டார்கள். அங்குள்ள ஆளுனருக்கும் முதலமைச்சருக்கும் பிரச்சனை இவ்வாறு இருந்தால் எவ்வாறு அபிவிருத்தியினை மேற்கொள்வது?

இன்று கிழக்கில் அனைவரும் ஒத்துழைத்து செல்வதனால்தான் இந்த அபிவிருத்திகள் நடைபெறுகின்றன. முரண்பட்டிருந்தால் ஒன்றுமே நடைபெற மாட்டாது.
இவைகளனைத்தினையும் கருத்தில் கொண்டு மக்கள் சிறந்த நபர்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

மின்சார வேலி அமைக்க நடவடிக்கை


மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள யானைகளின் அட்டகாசத்தினை நீக்குவதற்கு வனவிலங்கு பகுதியினருடன் கதைத்து இவ்வருடத்திற்குள் மின்சார வேலி அமைத்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.   இது தொடர்பில் நாடாளுமன்றத்திலும் நான் கதைத்துள்ளேன்.

இம்முறை தைப் பொங்கல் விழாவை மட்டக்களப்பு மாவட்டதில் கொண்டாடுவதற்கு ஏற்பாடு செய்துள்ளோம். இதில் பிரதம மந்திரி கலந்துகொள்ளவுள்ளார். பூஜை ஆராதனை நிகழ்வுகள் அனைத்தும் மாமாங்கக் கோயிலில் ஏற்பாடு செய்துள்ளோம். இந்த நிகழ்வு மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மேலும் பெருமை சேர்க்கின்றது' என அவர் தெரிவித்தார்

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .