2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

1976ஆம் ஆண்டு ஆட்சியை விட மோசமான ஆட்சி: கோவிந்தன் கருணாகரம்

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 25 , மு.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

வட, கிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்பட்டதன் பின்பு இங்கு நடக்கும் ஆட்சியானது தமிழ் மக்களை, தமிழ் இளைஞர்களை 1976ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆட்சியில் கோபத்துக்கு உள்ளாக்கியதை விட, மோசமாக இருக்கின்றது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

மட்டக்களப்பு, புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலய மண்டபத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் கவிஞருமான அம்பிலாந்துறையூர் அரியத்தின் 'தமிழன் தமிழனாக' கவிதை நூல் அறிமுக விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை (24)  நடைபெற்றது.

இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரனின்; நூல் அறிமுக விழாவின் மூலம் எமது தமிழ் இனம் பட்ட இன்னல்களையும் இழந்த இழப்புகளையும் தற்போதிருக்கும் நிலைமைகளையும் அழகான கவிதை வடிவில் சிந்திக்கும் படியாக எமக்கு தந்தமைக்கு முதற்கண் நன்றி தெரிவித்துக்கொள்ள வேண்டும்.

இன்று எமது இனம் எந்த நிலையிலிருக்கின்றது என்பதை நாம் அறிவோம். எமது இனம் தலை நிமிர்ந்து தமிழனாக, இந்த நாட்டின் பிரஜையாக, இந்த நாட்டின் அனைத்து மக்களும் சமமான உரிமையுள்ள பிரஜைகளாக வாழ வேண்டும் என்பதற்காக கடந்த ஆறு சகாப்தங்களுக்கும் மேலாக அகிம்சை, ஆயுத ரீதியாக போராடி இழந்தது.

இன்று கிட்டத்தட்ட நடுத்தெருவில் நிற்குமளவில் தற்போது இராஜதந்திர ரீதியாக புலம்பெயர் உறவுகளின் ஆதரவுடனும் மேற்குலக நாடுகளின் குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பு என்பவற்றின் ஊடாக எமது மக்களின் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாங்கள் காய் நகர்த்தல்களை மேற்கொண்டிருக்கின்றோம்.

இன்று 'தமிழன் தமிழனாக' என்ற நூல் தமிழன் தமிழனாக வாழ வேண்டும். தமிழன் தமிழனாக இந்த நாட்டில் தலை நிமிர்ந்து நிற்க வேண்டும் என்பதை நேரடியாகவும் மறைமுகமாகவும் கூறியிருக்கின்றது. இன்று நாம் தமிழன் தமிழனாக இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த நூல் மூலமாக அறிந்து வைத்திருப்பது மட்டுமல்லாது, தமிழனை தமிழனாக வாழ வைப்பதற்குரிய செயற்பாடுகளையும் மேற்கொள்ளவேண்டிய காலத்தின் கட்டாயத்தில் இருக்கின்றோம்.

தமிழன் தமிழனாக இருப்பதற்கு எமது அரசியல் சக்தியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நாம் பலப்படுத்தவேண்டிய தருணத்தில் இருக்கின்றோம். அது மட்டுமல்லாது,  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருக்கின்ற கட்சிகள் அனைத்தும் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டிய தருணத்திலும் இருக்கின்றன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஓர்; அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட வேண்டும். அது ஒரு கட்டமைப்புடன் எமது மக்களின் எதிர்காலத்தை நோக்காகக் கொண்ட ஓர் அரங்காகச் செயற்பட வேண்டும்.

இன்று எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இருக்கும் ஐந்து கட்சிகளும் தங்களுக்குள் தங்களை விமர்சிப்பதை முதல் நிறுத்திக்கொள்ள வேண்டும். நான் கடந்த 25, 30 வருடங்களுக்கு மேலாக ஒரு கட்சியைச் சார்ந்து இருந்தவன். நாடாளுமன்றத்திலே 1989இல் இருந்து 1994 வரைக்கும் எனது கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தினாலும், அப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இல்லாவிட்டாலும் ஒரு கூட்டாகத்தான் செயற்பட்டோம்.

இன்று எமது மக்களின் அரசியல் அபிலாஷைகள் நிறைவேற்றப்படும்வரை நாம் தமிழன் தமிழனாக இருக்க வேண்டும். தமிழ்த்  தேசியக் கூட்டமைப்பு ஒற்றுமையாக இருக்க வேண்டும். எமது மக்கள் எத்தனையோ இன்னல்ப்பட்டவர்கள். இது ஜனநாயக நாடாக இருந்தாலும் கூட, சர்வாதிகார ஆட்சி நடக்கும் நாடு. ஒரு ஜனநாயக நாடாக இருந்தால் எமது மக்களை இரண்டாம் தர பிரஜைகளாக எமது மக்களை மாறி மாறி ஆண்டு வந்த அரசாங்கங்கள் கணித்துக்கொண்டிருக்க மாட்டார்கள். நாம் பல வகையில் பாதிக்கப்பட்டவர்கள். ஜனநாயகத்துக்கு உதாரணமாக ஐக்கிய இராச்சியத்தை கூறலாம்.

எமது நாட்டைப் பொறுத்தமட்டில் இன்று வடக்கு, கிழக்கில் சர்வஜன வாக்கெடுப்பு இடம்பெற்றால் எமது மக்களில் 99 சதவீதமானவர்கள் நாங்கள் தனித்து பிரிந்திருக்க விரும்புகின்றோம் என்றுதான் கூறுவார்கள். ஏனென்றால்  கடந்த காலங்களில் அகிம்சை மற்றும் ஆயுத ரீதியாக போராடி பாதிக்கப்பட்ட நாங்கள், இன்று ஆயுதம் மௌனிக்கப்பட்டதன் பின் ஜனநாயக ஆட்சி நடக்கின்றது என்று கூறப்படும் இந்த நாட்டில் வட, கிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்பட்டதன் பின்பு இங்கு நடக்கும் ஆட்சி தமிழ் மக்களை, தமிழ் இளைஞர்களை 1976ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆட்சியில் கோபத்துக்கு உள்ளாக்கியதை விட மோசமாக இந்த மாகாணத்தில் இடம்பெறும் ஆட்சி இருக்கின்றது.

எமது கிழக்கு மாகாணத்தின் ஆளுநரும் முதலமைச்சரும் எமது தமிழ் இளைஞர், யுவதிகளை அரசாங்க வேலைவாய்ப்பில் மிகவும் புறக்கணித்து எந்த ஒரு தமிழ் இளைஞர், யுவதிகளும் அரசாங்க வேலையில் சேரக்கூடாத ஒரு நிலைமைக்குள் கொண்டு வந்திருக்கின்றார்கள். எனவே தான் எமது பிரதேசத்தில் ஜனநாயகம் மலர வேண்டும்.

ஜனநாயக ஆட்சி இந்த நாட்டில் நடைபெற்று எமது பிரதேசம் வடக்கு, கிழக்குக்கு சுதந்திரம் கேட்டு ஒரு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தக்கூடிய நிலை இந்த நாட்டில் இருக்குமாக இருந்தால், அதற்குரிய மனோபாவம் அவர்களுக்கு இருக்குமாக இருந்தால், எமது மக்களின் அரசியல் அபிலாஷைகளை தீர்க்கக்கூடிய ஒரு சுயாட்சியை கொண்ட ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டி முறையான ஒரு தீர்வை நாம் பெறலாம்.

அதுவரைக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாங்கள் ஒரே கட்சியாக எமது மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டும். போராட வேண்டும்' என்றார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X