2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

இலங்கை அரசுக்கு எதிரான நெருக்கடிகள் தமிழ் மக்களின் உரிமைகளை பாதிக்கக்கூடாது

Menaka Mookandi   / 2011 ஏப்ரல் 19 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கே.எஸ்.வதனகுமார், லோஹித்)

இலங்கை அரசு எதிர்க்கொண்டுள்ள இராஜதந்திர நெருக்கடிகளால் தமிழ் மக்களின் உரிமைகள் பாதிக்கப்படக் கூடாது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அவ் அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,  'ஓர் அரசு தனது இறைமையை காப்பாற்ற வேண்டியது அதன் கடமையாகும். இந்தவகையில் இலங்கை அரசு செயல்படுகிறது. இந்த இறைமை என்பது நாட்டிலுள்ள  சகல இனத்தவர்களின் ஒட்டுமொத்த உரிமையாகும். இது பெரும்பான்மை இனத்தவர்களுக்கு மட்டும் உரித்தானதல்ல.
சிறுபான்மை இனத்தவர்களுக்கும் உரியதாகும்.

அந்த வகையில் தமிழ் மக்களின் ஜனநாயக மனித உரிமைகள் மதிக்கப்படுதல் வேண்டும். அது எப்போதாவது அல்லது தவிர்க்க முடியாதவகையில் மீறப்பட்டிருந்தால் அதை ஏற்றுக்கொண்டு சீர்செய்வது ஜனநாயக அரசின் கடமையாகும்.

அந்தவகையில்  ஜ.நா. நிபுணர் குழு பரிந்துரைத்துள்ள குற்றச்சாட்டுகளில் உண்மையானவைகள் எவை என அறிந்து அவைகளை சீர்செய்ய அரசு முன்வருதல் வேண்டும். தான் ஒரு குற்றமும் செய்யவில்லை என்று அடம்பிடிப்பது நீதியான ஓர் அரசின் இலட்சணம் அல்ல.

புலிகள் பயங்கரவாத செயல்பாடுகளில் இறங்கியதன் காரணமாக சர்வதேச நாடுகளின் துணையுடன் பயங்கரவாதத்தை ஒழித்துவிட்டோம் என சொல்லிக்கொள்ளும் அரசு அப்பாவித் தமிழ் மக்களை பாதிப்புக்கு  உள்ளாக்கியதும்  ஒரு பயங்கரவாதமே.

தற்சமயம் மக்கள் விரும்புகின்ற சூழல் உருவாகி உள்ளதாக அரசு கூறிக்கொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் தமிழ் மக்களின் அதிகாரப்பரவலாக்கல் தொடர்பாக பேச்சு வார்தையில்  ஈடுபட்டுவருகிறது.   

இப்பேச்சவார்தையானது கடந்த காலத்தில் போலல்லாது தமிழ் மக்களின் அங்கீகாரத்துடனும் இந்தியா உட்பட சர்வதேச நாடுகளின் தூண்டுதல்களினாலும் இலங்கை அரசுடன் சேர்ந்துள்ள கட்சிகளின் அனுசரணையுடனும்  பேச்சுவார்தை நடந்து வருகின்றது.

இது கடந்த காலத்தை போலல்லாது தமிழ் சமுகத்தில் ஒரு விழிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இப்பேச்சுவார்தையை இருதரப்பினரும் இதய சுத்தியுடன் மேற்கொண்டு தீர்வை நோக்கி நகர்தல் வேண்டும்.

வடக்கு கிழக்கு மாகாணங்களிற்கு காணி, பொலிஸ், நிதி, நீதி, குடியேற்றம், பொதுநிர்வாகம், கலாச்சாரம், போக்குவரத்து, மீள்குடியேற்றம், மீன்பிடி விவசாயம், நீர்ப்பாசனம், கல்வி, மொழி அமுலாக்கல், வரிஅறவீடு  மின்சாரம் உட்பட பல அதிகாரங்கள் முழுமையாகத் தேவை.

இவை அனைத்திலும்   கிழக்கு மாகாணசபை அரை குறை அதிகாரங்களையே கொண்டுள்ளது.  இவ்வாறு இல்லாமல் வடகிழக்கு மாகாணங்கள் பூரண அதிகாரங்கள் பெறக்கூடியதாக பேச்சுவார்தை அமையவேண்டும். இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கடமை பாரியது. இதை உணர்ந்து செயல்திறனுடன் செயல்பட்டு காரியமாற்றுதல் வேண்டும்.

இலங்கை அரசு கடந்த காலத்தில் நடந்த பேச்சுவார்தைகளை இழுத்தடித்தது போல் இல்லாமல் இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தேவையான அதிகாரங்களை தமழ் மக்களுக்கு வழங்க முன்வரவேண்டும்' எனவும் அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .