2026 மே 05, செவ்வாய்க்கிழமை

மாணவன் தாக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்த அரியம் எம்.பி. கோரிக்கை

Super User   / 2012 ஏப்ரல் 24 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.லோஹித்)

அம்பிளாந்துறையில் இருந்து செட்டிபாளைத்துக்கு பாடசாலைக்கு சைக்கிளில் சென்றுகொண்டிருந்த மாணவனொருவரை வாகனமொன்றில் வந்த இனந்தெரியாத நபர்கள் தாக்கிவிட்டு தாழங்குடா காட்டுப் பகுதியில் வீசியெறிந்து சென்றமை தொடர்பில் கொக்கட்டிச்சோலை பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"நேற்று திங்கட்கிழமை செட்டிபாளையம் மகா வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி கற்கும் அம்பிளாந்துறை, கற்சேனையை சேர்ந்த சின்னத்துரை கோகுலராஜ் எனும் மாணவன் தனது வீட்டில் இருந்து அம்பிளாந்துறை இயந்திர படகு மூலம் ஆற்றைக் கடந்து குருக்கள்மடம் ஊடாக செட்டிபாளையத்தை நோக்கிச் சென்றுள்ளார்.

இவர் மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியின் குருக்கள்மடம் கிறிஸ்தவ தேவாலயத்துக்கு அருகில் துவிச்சக்கர வண்டியில் சென்றுகொண்டிருந்த போது சிறிய வாகனமொன்றில் வந்துகொண்டிருந்த சிலர் குறித்த பாடசாலை மாணவனை துவ்விச்சக்கர வண்டியோடு பிடித்து வாகனத்தில் ஏற்றிச்சென்றுள்ளதுடன் அவரை கடுமையாகவும் தாக்கியுள்ளனர்.

மாணவன் சுயநினையிழந்த நிலையில் தாழங்குடாவில் உள்ள காட்டுப் பகுதியில் வீசிவிட்டு சென்றுள்ளனர். இந்த நிலையில் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் 2 மணியளவில் சுய நினைவு திரும்பிய நிலையில் மீண்டும் தனது இல்லத்துக்கு வந்து நடந்தவற்றை தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து சம்பவம் தொடர்பில் கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் உறவினர்களினால் முறையிடப்பட்டுள்ளதுடன் தற்போது மாணவன் மகிழடித்தீவு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளான்.

இது தொடர்பில் குறித்த மாணவனின் பெற்றோரினால் எனது கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர், பொலிஸ் அத்தியட்சர், கொக்கட்டிச்சோலை பிரதேச பொலிஸ் பொறுப்பதிகாரி ஆகியோரின் கவனத்துக்கும் கொண்டுசென்றுள்ளேன்.

மாணவர்கள் தங்களது கல்வியை சுதந்திரமாக கொண்டுசெல்ல இவ்வாறன சம்பவங்கள் தடைக்கல்லாக அமையும். எனவே மாணவனை தாக்கியோர் தொடர்பில் விரைவில் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளேன்" என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .