2025 மே 05, திங்கட்கிழமை

வவுணதீவு மதுபானக் களஞ்சியத்தின் பதிவை இரத்துச் செய்ய வேண்டுகோள்

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 01 , மு.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மாணிக்கப்போடி சசிகுமார்


வவுணதீவில் இயங்கி வருகின்ற மதுபானசாலைக்  களஞ்சியத்தின் பதிவை இரத்துச் செய்யுமாறு வவுணதீவு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சிவில் பாதுகாப்புக்குழுப் பிரதிநிதிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மட்டக்களப்பு நகர் உட்பட ஏனைய பகுதிகளில் உள்ள மதுபான சாலைகளுக்கான விநியோகத்தை மேற்கொள்வதற்கான மதுபானக் களஞ்சியம் வவுணதீவில் இயங்கி வருகின்றது. இந்தக் களஞ்சியத்தின் பதிவை  இரத்துச் செய்யுமாறும் அவர்கள் கூறியுள்ளனர்.

நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை மாலை வவுணதீவு பரமேஸ்வரா வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்ற வவுணதீவு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சிவில் பாதுகாப்புக் குழுக்களின் மீளாய்வுக் கூட்டத்திலேயே இவர்கள் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்.

வவுணதீவில் மதுபானசாலை இல்லை. மொத்த விற்பனைக்கான களஞ்சியமே உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டபோதும்,  இந்தக் களஞ்சியத்தில் சில்லறையாகவும் விற்கப்பட்டு வந்ததாகவும்  வவுணதீவு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சிவில் பாதுகாப்புக்குழுப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த கூட்டத்தில் நாங்கள் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய சில்லறை விற்பனையினை பொலிஸார் நிறுத்தியுள்ளபோதும் இரவு வேளைகளில் உள்ளூர்களில் உள்ள மதுபான விற்பனையாளர்களுக்கு இரகசியமாக வழங்கும் நடவடிக்கை இடம்பெறுகின்றது எனத் தெரிவித்த சிவில் பாதுகாப்புக் குழுப் பிரதிநிதிகள், ஏனைய பிரதேசங்களுக்கான விநியோகக் களஞ்சியம் எமது பிரதேசத்தில் தேவையில்லாததினால் அக்களஞ்சியத்துக்கு வருடா வருடம் வழங்கும் அனுமதிப்பத்திரம் புதுப்பித்தலை இரத்துச் செய்து நிறுத்;துவதனுடாக வழங்கியுள்ள அனுமதிப்பத்திரத்தையும் இரத்துச் செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

வவுணதீவு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நிலங்க பெர்னாண்டோ தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் வவுணதீவுப் பொலிஸ் பிரிவில் உள்ள 16 சிவில் பாதுகாப்புக் குழுக்களினதும் தலா 25 பிரதிநிதிகள்  கலந்துகொண்டனர்.

இதேவேளை, வவுணதீவுப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக ஆற்று  மணல் அகழப்படுவதாகத் தெரிவித்த இவர்கள்,  அனுமதிப்பத்திரத்தை துஷ்பிரயோகம் செய்து அனுமதி வழங்கிய இடத்தை விட்டு வேறு இடங்களில் ஆற்று மணல் அகழ்கின்றனர். இதனால் வயல்கள் பாதிக்கப்படுகின்றன. மேலும்,  இரவு வேளைகளில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோததாக  ஆற்று மணல் அகழப்படுவதாகவும் இதனைத்  தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X