2025 மே 01, வியாழக்கிழமை

உள்ளூராட்சி ஆணையாளர் நியமனத்திற்கு கூட்டமைப்பு எதிர்ப்பு

Super User   / 2014 ஜனவரி 01 , பி.ப. 12:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளராக எம்.வை.சலீம் நியமிக்கப்பட்டுள்ளமைக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர்கள் கையொப்பமிட்டு கிழக்கு மாகாண ஆளுநர் மொஹான் விஜயவிக்ரமவிற்க்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளனர்.

எட்டு அம்சங்களை கொண்ட இந்த கடிதத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர்கள் 11 பேர் கையொப்பமிட்டுள்ளனர். இது தொடர்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பினால் ஆளுநருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"தமிழ் மக்களை பொறுத்த வரையில் கிழக்கு மாகாணத்தில் உள்ளூராட்சி என்ற விடயம் மிக முக்கியமானதாகும். தற்போது உள்ளூராட்சி ஆணையாளராக முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த ஒருவரை நியமிக்கவுள்ளதாக நாம் அறிகின்றோம். இது நடைபெறுமாயின் அதியுயர் மட்டத்திலிருந்து அடிமட்டம் வரையான உள்ளூராட்சி அதிகாரிகளாக முஸ்லிம்கள் இருப்பர்.

எனவே மேற்குறிப்பிட்டவாறு உள்ளூராட்சி ஆணையாளர் அமைவாராயின் கிழக்கு மாகாணத்தில் நாம் பேணிவந்த இனசார்பின்மையையிட்டு நாம் விசனமடைவோம். உள்ளூராட்சி ஆணையாளராக முஸ்லிம் ஒருவர் இருப்பாராயின் மேலே குறிப்பிட்ட எமது நியமங்கள் குழம்பிப்போகலாம்.

இந்த அடிப்படையில் உள்ளூராட்சி ஆணையாளராக நாம் மேலே குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவரை நியமிக்கவுள்ளதை மீள்பரிசீலனை செய்யுமாறு வேண்டிக்கொள்வதுடன் தற்போதைய உள்ளூராட்சி ஆணையாளரின் சேவையை நீடிக்கும் படி கேட்டுக்கொள்கின்றோம்.

அல்லது குறித்த இனத்தவரல்லாத வேறு ஒருவரை நியமிக்கும் படியும் நாம் உங்களிடமும் கேட்டுக்கொள்கின்றோம். இந்த கோரிக்கை நியாயமானதொரு சமநிலைப்பட்ட நிர்வாகத்தை பேணுவதற்கான வேண்டுகோளாகும். இதற்கு மேலாக வேறு எதனையும் கருத்தில் கொண்டு எழுதப்படவில்லை" என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கடிதத்தின் பிரதி மாகாண பிரதம செயலாளருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளராக எம்.வை.சலீம் மாகாண ஆளுநர் மொஹான் விஜயவிக்ரமவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையிலேயே குறித்த நியமனத்திற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0

  • kilakkooran Thursday, 02 January 2014 10:44 AM

    கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பதவி தமிழ் சமுகத்துக்குரிய பதவியல்ல. இது அரச பதவி. எவரும் நியமிக்கப்படலாம். இதை தமிழ் சமுகம் புரிந்து கொள்ள வேண்டும். இதை விடுத்து, இனவாதம் பேசுவது சிற‌ந்ததல்ல. எம்.வை.சலீம் உள்ளுராட்சி தொடர்பாக 19 வ‌ருட அனுபவம் கொண்டவர். பொருத்தமான நியமனம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .