2025 மே 01, வியாழக்கிழமை

குருக்கள்மடம் மனித புதைகுழி குறித்த சரியான ஆதாரம் வேண்டும்: மெக்ஸ்வல்

Menaka Mookandi   / 2014 ஜூன் 10 , மு.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


மட்டக்களப்பு, குருக்கள் மடத்தில் சில உடலங்கள்; புதைக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்பட்டதை மாத்திரம் வைத்துக்கொண்டு ஆணைக்குழுவினால் விசாரணையை மேற்கொள்ள முடியாது. சரியான ஆதாரங்களுடன்தான் அந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என காணாமல் போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி மெக்ஸ்வல் பராக்கிரம பரணகம தெரிவித்தார்.

ஆரையம்பதி பிரதேச செயலக மண்டபத்தில் நேற்று திங்கட்கிழமை (09) நடைபெற்ற காணாமல் போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வின் நிறைவில் கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

குருக்கள்மடம் விவகாரம் இப்போது விசாரணையில் உள்ளது. சில உடல்கள் அங்கு புதைக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் புதைக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்பட்டதை மாத்திரம் வைத்துக்கொண்டு ஆணைக்குழுவினால் விசாரணை மேற்கொள்ள முடியாது. சரியான ஆதாரங்களுடன்தான் விசாரணைகளை மேற்கொள்ளலாம்.

அத்துடன் வெறும் வாய்மூலமான சாட்சியங்களை வைத்துக்கொண்டு விசாரணை நடத்த முடியாது. சரியான ஆதாரங்களுடன் முறைப்பாடுகள் தொடர்பில் ஆராயப்படும் என்று அவர் கூறினார்.

இம்முறை மட்டக்களப்பில் நடைபெற்ற காணாமல் போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளில் காத்தான்குடியில் நடைபெற்ற சாட்சியங்களில் அதிகமான முறைப்பாடுகளில் காத்தான்குடி - கல்முனை வீதியில், முஸ்லிம் மக்கள் கடத்தப்பட்டதாகவும் பாதிக்கப்பட்டதாகவும் தான் கூறப்பட்டது.

ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் நடைபெற்ற விசாரணைகளின் போது ரெலோ இயக்கமும் இராணுவத்தினரும் மேற்கொண்ட கடத்தல்கள் தொடர்பானதாகவே முறைப்பாடுகள் இருந்தன. அதேநேரம் திங்கட்கிழமை இடம்பெற்ற முறைப்பாடுகள் விடுதலைப் புலிகளுக்கு எதிரானவையாகவே இருந்தன என்று அவர் கூறினார்.

இதேவேளை, தனிநபர்கள் குறித்து மேற்கொள்ளப்பட்டுள்ள முறைப்பாடுகள் தொடர்பிலும் விசேடமாக ஆராயப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்படும். முறைப்பாடுகள், விசாரணைகள் நிறைவுக்கு வரும்போது யார் யாரை விசாரணை செய்யவேண்டும் என்ற முடிவு எடுக்கப்படும் எனவும் ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி மெக்ஸ்வல் பராக்கிரம பரணகம மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .