2025 மே 01, வியாழக்கிழமை

ஏறாவூரில் இஞ்சிச் செய்கை

Suganthini Ratnam   / 2014 ஜூன் 16 , மு.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் விவசாய விரிவாக்கல் பிரிவின்  17 கிராம அலுவலர் பிரிவுகளிலும் கடந்த ஒரு வருடமாகவிருந்து இஞ்சிச் செய்கை  அதிக ஆர்வத்துடன் மேற்கொள்ளப்படுவதுடன், இதன் அமோக விளைச்சலும் இலாபமுமே இந்த ஆர்வத்திற்கு காரணம் என விவசாய போதனாசிரியை எம்.எச்.முர்ஷிதா ஷிரீன்  தெரிவித்தார்.

சுமார் 60 குடும்பங்கள் இஞ்சிச் செய்கையில் ஈடுபட்டுள்ளதாகவும்  அவர் கூறினார்.

பரல் ஒன்றில் இஞ்சிச் செய்கையை மேற்கொண்டுள்ள விவசாயிகளும் உள்ளனர்.  கூடியளவாக  1,500 பரல்களில் இஞ்சிச் செய்கையை மேற்கொண்டுள்ள விவசாயிகளும் உள்ளனர்.

சமீப சில நாட்களுக்கு முன்னர் 1,500 பரல்களில் இஞ்சிச் செய்கை மேற்கொண்ட விவசாயி ஒருவர் இதற்காக 560,000 ரூபாவை  முதலீடு செய்திருந்தார். இந்த நிலையில், அறுவடையின் மூலம் அவருக்கு கிடைத்த மொத்த வருமானம் 28 இலட்சம் ரூபாவாகும் எனவும் அவர் கூறினார்.

இஞ்சிச் செய்கையில் விவசாயிகள் தற்போது அதிக ஈடுபாடு காட்டுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. விவசாயிகளுக்கு விழிப்புணர்வூட்டுவதன் மூலம் இஞ்சிச் செய்கையின் அனுகூலங்களை  விளங்கிக்கொள்கின்றனர்.  இஞ்சிச் செடிகளில் நோய் பீடைத் தாக்கம் குறைவாகவுள்ளது.  இதனால், இதன் பராமரிப்புக்கு அதிக பிரயாசை எடுக்கத் தேவையில்லை.

இஞ்சிச் செடிகளுக்கு அதிக நீர்பாய்ச்சத் தேவையில்லை என்பதால், தூவல் நீர்ப்பாசனம் மட்டும் போதுமாக உள்ளது.  இதனால்,  இஞ்சிச் செய்கை விவசாயிகளிடம் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

இஞ்சிச் செய்கையை  எந்த இடத்திலும் செய்கை பண்ணலாம்.  வீட்டுவளவில் உள்ள முந்திரிச் செடி, மா, பலா, தென்னை, பப்பாசி, வாழை போன்ற அடர்ந்த மரங்களுக்கு இடையில்;  ஊடுபயிராகவும்  இஞ்சிச் செய்கையை  மேற்கொண்டு  அதிக  இலாபத்தை ஈட்ட முடியும் எனவும்  நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

கறுப்பு நிற பொலித்தீன் மூலம் 1அடி உயரமும் 3 அடி விட்டமும் கொண்ட பரல் ஒன்றைச்  செய்யமுடியும். இதில்;  200 கிராம் இஞ்சியை செய்கை பண்ணுவதால் சுமார் 6 கிலோகிராம் விளைச்சலை பெறமுடியும்.  மேற்படி பரலைத் தயாரிப்பதற்கு ஏற்படக்கூடிய செலவு  200 ரூபாவாகும் எனவும் அவர் கூறினார்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .